என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!” | Simmering storm within me - Kamalhaasan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/01/2018)

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

படம்: ஜி.வெங்கட்ராம்

ழைய கடமை ஒன்று, புதிய கடமை இன்று... இப்படி என் முன்னால் இரு கடமைகள். ஆம், சமூகத்தை நோக்கிய என் பயணத்தை நான் கடமையாகத்தான் நினைக்கிறேனே தவிர வாய்ப்பாகக்கூடக் கருதவில்லை.  எப்படியிருந்தாலும் வேறொரு ரூபத்திலாவது இது நிகழ்ந்திருக்கும். ஆனால், இன்னும் முனைப்போடு இறங்கிச் செய்வதுபோன்ற சூழல் இப்போது கனிந்துள்ளது. 

அதன் முதல் படியாக மக்களைச் சந்திக்கப் பயணம் கிளம்புகிறேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி. இந்தப் பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறேன் என்று சொல்வதற்கு முன், சின்ன முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன்.

எங்கள் அப்பா சீனிவாசன், வழக்குரைஞர். அப்போது அவர் ராமநாதபுரம் உட்பட இரண்டு சமஸ்தானங்களுக்கான சட்ட வல்லுநர். அதனால் அங்குள்ள அரண்மனைவாசிகளுடன் அவருக்கு நல்ல நட்பு. இப்போது உள்ளதுபோல் அப்போதும் அது புயல், மழைக்கெல்லாம் வாய்ப்பில்லாத பகுதி. ஆனால், 1954-ல் அங்கு பெரிய புயல், மழை. அதில் மருத்துவமனை உட்பட ராமநாதபுரமே வெள்ளத்தில் மிதந்திருக்கிறது.

அந்த மழை நாளில்தான் அம்மாவுக்குப் பிரசவ வலி. நீர் சூழ்ந்த வீடு, மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது ஆரோக்கியமான சூழலாக இருக்காது என்பதால் அம்மாவுக்கு அங்குள்ள அரண்மனையில் வைத்துப் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். இதன்மூலம் நான் பிறந்தது ராமநாதபுரத்தில், முதல் இரண்டாண்டுகள் வரை வளர்ந்தது மட்டுமே பரமக்குடியில் என்ற தகவலைப் பதிவு செய்கிறேன். இந்த விவரம் அறிந்த ராமநாதபுரத்துக்காரர்கள், ‘என்னங்க, பிறந்த ஊருக்கு வரமாட்டேங்குறீங்க’ என்று அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆமாம், நான் கடைசியாக ராமநாதபுரத்துக்குச் சென்றபோது எனக்கு வயது 22. எங்கள் பாட்டி, அதாவது அப்பாவின் அம்மா ராமநாதபுரத்தில்தான் இருந்தார். அப்போது அவருக்கு 99 வயது. ‘`செஞ்சுரி அடிச்சிடுவீங்களா பாட்டி’’ என்றேன். ‘`இங்க வா, உன்னை அடிக்கிறேன்’’ என்றார். ‘தசாவதாரம்’ படப் பாட்டிக்கு அவர்தான் ரெஃபரென்ஸ். அந்தப்பட மேக்கப்மேனுக்கும் அமெரிக்கச் சிற்பிகளுக்கும் அவரின் படத்தைக் காட்டி, ‘`இந்த மாதிரி வேணும்’’ என்று அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.

இப்படி நான் பிறந்ததும் அரண்மனை, சென்னையில் வளர்ந்ததும் அரண்மனையில்தான். ஆம், சென்னையில் இப்போது நான் உள்ள ஆழ்வார்பேட்டை வீடு ஒருகாலத்தில் திவாகர் ராஜா அவர்களின் வீடு. அவர், ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உறவுக்காரர். இதுவும் அப்போது அரண்மனைதானாம். பிறகு இந்த வீட்டை ராஜமன்னார் செட்டியார் என்பவரிடம் திவாகர் ராஜா விற்றுவிட்டார்.

பிறகு இந்த வீட்டின் மேல்தளத்துக்கு நாங்கள் வாடகைக்குக் குடிவந்தோம். ராஜமன்னாரின் மகன் சிவக்குமார் எனக்கு மூத்தவர். ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். அவர் நன்றாகப் படிக்கும் பிள்ளை, நான் சுமாராகக்கூடப் படிக்காத பிள்ளை என்பதுதான் இருவருக்குமான வித்தியாசம். எங்கள் அம்மா எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அவர்கள் வீட்டு ரசம் அவ்வளவு ருசிக்கும். ராஜி மாமி எனக்காகக் கிண்ணத்தில் ரசம் எடுத்து வைத்திருப்பார். இப்படி ரசத்தை மட்டுமன்று பாசத்தையும் பரிமாறிக்கொள்ளும் ஒரே குடும்பம்போல் பழகி வந்தோம்.