நான் அகதி! - 17 - மீண்டும் அகதி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருதன்

ஷீம் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார். மத்தியதரைக்கடல் பகுதியின் மையத்தில் அவருடைய கப்பல் மேலும் கீழுமாக அசைந்தபடி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது. அல்லது ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கவும் கூடும். வேறுபாட்டைக் கண்டறியும் அளவுக்குப் புலன்கள் கூர்மையாக இல்லை. கண்ணுக்கு எட்டியதொலைவுவரை எந்த வெளிச்சமும் தென்படவில்லை. கரை எந்தப் பக்கம் என்று தெரியவில்லை. முடிவற்று நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. அருகிலிருப்பவர்களிடம் பேசுவதற்கும் அச்சமாக இருந்தது. பெரும்பாலானோர் இறுகிய முகத்துடன் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய உதடுகள் வெடித்திருந்தன. சொற்களை உற்பத்தி செய்யும் திறனை அவை இழந்துவிட்டதுபோல் இருந்தது ஹஷீமுக்கு.

எகிப்தை விட்டு இத்தனை சீக்கிரம் வெளியேற வேண்டியிருக்கும் என்று ஹஷீம் நினைக்கவேயில்லை. 10 ரமலான் எங்கேயிருக்கிறது என்று இப்போதுதான் தேடியதுபோல் இருக்கிறது. சிரமங்கள் சில இருந்தன என்றபோதும் எகிப்து பாதுகாப்பான ஒரு தேசமாகவே இருந்தது. நீ யார்? உன்னைப் பார்த்தால் எகிப்தியரைப் போலவே இல்லையே? உன் ஆவணம் எங்கே? அகதி என்றால் முகாமில்தானே இருக்கவேண்டும், நகரத்தில் உனக்கென்ன வேலை? இப்படி ஒருவரும் ஹஷீமைக் கேட்கவில்லை.

``இதுதான் இங்கே இயல்பா?’’ என்று பயம் கலந்த மகிழ்ச்சியுடன், தெரிந்தவர்களை விசாரித்தார். அவர்கள் ஹஷீமின் முதுகில் ஒரு போடு போட்டார்கள். ``நண்பா, நீ அகதி என்பதை மறந்துவிடு. பாலோடு நீர் சேர்வதுபோல் எகிப்தியர்களோடு சிரியர்களால் சுலபமாக ஒன்றுகலந்துவிட முடியும்’’ என்றே அனைவரும் சொன்னார்கள். ``நான் வந்து பல மாதங்களாகிவிட்டன. எகிப்தியர்களுக்குக் கிடைத்த எல்லாமே எனக்கும் கிடைக்கிறது’’ என்றார் ஒருவர். ``நான் வேலைக்குப் போகிறேன், என் குழந்தையை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறேன், இது சிரியாவா எகிப்தா என்றுகூட எனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது என்றால் பாரேன்’’ என்றார் இன்னொருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick