சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

நட்சத்திரத்தில் உறங்கிய பறவை

பறந்துவிடுவதற்கான முன் ஆயத்தம்
சிறகைத் தூசி தட்டி நிமிர்ந்து
சோம்பல் முறித்து எழுகிறது பறவை.
வானின் நீண்டவெளியில்
பூமியின் தூரத்தை மிஞ்சிய
அந்தப் பறவை
ஒரு சொல்லொன்றை ஆகாயத்திலிருந்து
உதிர்த்துவிடுகிறது.
அது மேகங்களில் மறைந்து
தாமதமாகக் கீழிறங்குகிறது.
பெருமலைகளில் மோதுண்டும்
பெருமரங்களில் மோதுண்டும்
நதிகளில் விழுந்து  நனைந்தும்
பூமிக்கு இறங்குகிறது.
அது உதிர்த்த சொல்லில் வடிந்த
குருதித் துளிகளின் தடயம்
கம்பளிப்பூச்சி வரைந்த கோடுகளைப்போல
ஓவியமானது.
தாமதத்தின் வெறுப்பை, பறவை
ஒரு சகாராவின் சூட்டைச் சுமக்கச் சொல்லி
அந்தச் சொல்லுக்குக் கட்டளையிடுகிறது.
மறுத்துவிடுகிற சொல்லை
ஆகாயத்துக்குப் புறப்படச் சொல்கிறது.
சொல் கடந்த தூரத்தைப் பறவை ஒத்திருந்தது.
இரவு, சொல்லையும் பறவையையும்
பிடித்துக்கொள்கிறது.
நட்சத்திரம் உறங்க அழைக்கிறது.
பறவை, சொல்லோடு தஞ்சம் புகுந்துகொள்கிறது
இப்போது பறவை தன் தூக்கத்தில்
அந்தச் சொல்லைப் பிரதி செய்கிறது
இயலாமையென!


- ஜே.பிரோஸ்கான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick