உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

கவிதை: வெய்யில் - ஓவியம்: செந்தில்

1
குடை ரிப்பேர்... குடை ரிப்பேர் என்று பாடிக்கொண்டு வந்தவருக்கு
இந்தக் கோடையின் முதல் மாதுளைச் சாற்றைப் பருகத் தந்தோம்
என் தந்தையின் பழுதுற்ற உயிர்மையை அவர் செப்பனிடத் தொடங்கினார்
அம்மா அவருக்கு ஒத்தாசையாக அருகிலேயே இருந்தாள்
அவளது வியர்வை அவ்வளவு மர்மமான வாசனைகொண்டிருந்தது
அக்காவும் நானும் ரிப்பேர்காரரின் பையிலிருந்த
சுத்தியலைக்கொண்டு எங்கள் உச்சந்தலையை
விளையாட்டாகத் திறந்தோம்
வீட்டைச் சுற்றி மழை பக்கவாட்டில் பெய்தது அன்று.

2
உப்புக்குறவர் ஒருவர்
பாலைப் பெரும்பொழுதில் ஊருக்கு வந்தார்
அவரது குடிசையை கழுதைகளை பிள்ளைகளை சாக்குகளை
எஃகுப் பாதையில் ஓர் ஊர்தி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கலங்கினார்
அதன் கூவல்
அவரது மூப்பனின் சாவுக்கேவலை ஒத்திருந்தது
நம்மால் என்ன முடியும்?
கொஞ்சம் ஆறுதல்சொல்லி
குறிபார்த்து அவர் துப்பாக்கி பழக
எங்கள் பிள்ளைகளின் தலைகளை அனுப்பிவைத்தோம்
பூச்சூடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick