விகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது!” - அர்விந்த் சுவாமி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

“உங்களுக்கு நடந்த விபத்து குறித்து சொல்லுங்க...”

- இரா.கலைச்செல்வன்

“ஒரு இடத்துல இருந்து தெரியாத்தனமா கீழே குதிச்சுட்டேன். ஆனா அந்த இடம் அவ்வளவு ஆழமா இருக்கும்னு எனக்கு முதல்ல தெரியலை.முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். கொஞ்சநாள் கழிச்சு நடக்க முடியாமப் போயிருச்சு. ஒரு கால்ல சுத்தமா உணர்ச்சி இல்லை. ‘தண்டுவடத்துல அறுவை சிகிச்சை பண்ணினாத்தான் சரியாகும்’னு சொன்னாங்க. எனக்கு அறுவைசிகிச்சை பண்றதுல விருப்பம் இல்லை. பத்து மாசம் வெறும் பிசியோதெரபி மட்டுமே பண்ணிட்டு சமாளிச்சுட்டு இருந்தேன். ஆனா அது சரியா வரலை. அப்பதான் நண்பர் ஒருவர் ஆயுர்வேத மருத்துவத்தைப் பரிந்துரை செய்தார். அந்த சிகிச்சைக்குப் பிறகுதான் குணமாகி, பழைய நிலைமைக்குத் திரும்பினேன்.”


 “நீங்க உடல்நலம் சரியாகித் திரும்பிவந்தப்ப, உங்களைப் பற்றி வந்த மீம்ஸ்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணீங்க?”

- வெ.நீலகண்டன்

“நான் குண்டா, மொட்டைத் தலையுடன் இருப்பதை வைத்து வெளியான மீம்ஸ்களைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. அப்போ எனக்கு இருந்த உடல் சூழ்நிலையே வேற. அது தெரியாத சிலரும், தெரிஞ்ச சிலரும் மீம்ஸ் போட்டிருந்தாங்க. ஆனா அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் முதலில் அழகா இருந்தேன்னும் நினைக்கலை. அப்புறம் அசிங்கமாயிட்டேன்னும் நினைக்கலை. நான் அழகா இருக்குறேன்னு மக்கள்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதே மக்கள் மீம்ஸ் போட்டும் கலாய்ச்சாங்க”

“மணிரத்னத்துடன் உங்கள் செகண்ட் இன்னிங்ஸ் எப்படி ஆரம்பிச்சது?”

- வெய்யில்

“நடுவுல உடம்பு சரியில்லாம இருந்த சமயத்தில் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டதால என் உடல் எடை 110 கிலோ இருந்துச்சு. தினசரி வேலைகள் செய்யறதே கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டு இருந்தேன். அப்ப ஒருநாள் திடீர்னு மணி சார் கூப்பிட்டார். ‘எப்படி இருக்கே. ஒரு புராஜெக்ட் இருக்கு’ன்னார். ‘இதை ஏன் நம்மகிட்ட சொல்றார்’னு எனக்குள் யோசனை. ‘நீ பண்ணு’ன்னார். ‘என்னால முடியாது சார்’னு சொன்னேன். ‘நீ பண்ண முடியுமா, முடியாதானு உன்கிட்ட கேட்கலை. உனக்கு இந்த ரோல் பிடிச்சிருக்கான்னுதான் கேட்டேன். உன்னால முடியும். ரெண்டு மாசம் டைம் இருக்கு’ன்னு சொன்னார். ‘ஓகே. இதைச் சவாலா எடுத்துக்குறேன். ஒரு மாசம் கழிச்சு வர்றேன். அப்ப எனக்கு நம்பிக்கை இல்லைனா வேண்டாம்னு சொல்லிடுவேன்’னேன். பிறகு தினமும் உடற்பயிற்சி, ரன்னிங் போக ஆரம்பிச்சேன். ‘இன்னைக்கு இதுதான் நடந்துச்சு’னு தினமும் மணி சாருக்கு மெசேஜ் பண்ணுவேன். ‘உன்னால் முடியும்’னு அவர்கிட்ட இருந்து பதில் மெசேஜ் வரும். ஒரு மாசத்துல 14 கிலோ எடை குறைச்சேன். அவருக்கு என்மேலே நிறைய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னைக் ‘கடல்’ மூலம் திரும்ப வரவெச்சது!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick