“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

எம்.குணா, தமிழ்ப்பிரபா

``டீஸர் சிறப்பா வந்திருக்கு ப்ரோ... பாக்குறீங்களா?’’ - அன்போடு கேட்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினியுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தி அவரது முகத்தில் தெரிகிறது. டீஸரைப் பார்த்துவிட்டு இரஞ்சித்துடன் நடத்திய  உரையாடல் இங்கே!

`` `கபாலி’ முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டிருந்தப்ப, ‘அப்பா உங்களை மீட் பண்ண நினைக்கிறார்’ன்னு சௌந்தர்யா சொன்னாங்க. சாரை மீட் பண்ணேன். ‘கபாலி கொடுத்த புத்துணர்ச்சியில நான் இன்னும் எட்டுப் படம் பண்ற அளவுக்கு எனர்ஜியா இருக்கேன் டைரக்டர் சார். திரும்பவும் நாம சேர்ந்து படம் பண்ணலாம்’னு சொன்னவர் `கபாலி இரண்டாம் பாகமே பண்ணலாமா?’ன்னு கேட்டார். `சரி சார்’னு சொல்லி அதுக்காக வொர்க் பண்ணேன். ஆனா, இந்தக் `கபாலி’ கதை வேற ஒரு களத்துல பயணிக்கணும்னு சார்கிட்ட சொல்லிட்டு  மும்பைக்குக் கிளம்பிட்டேன். அங்க இருக்கிற கேங்ஸ்டர்களைப் பத்தி தெரிஞ்சிக்க நிழல் உலக தாதாக்களைச் சந்திச்சேன். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை முழுசா ஆராய்ச்சி பண்ணேன். மும்பைத் தெருக்கள்ல சும்மா சுத்திட்டிருந்தேன். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம், எங்க போனாலும் பெரிய பெரிய கட்டடங்கள்... அதன் காலடியில சுற்றி இருக்கிற குடிசைப்பகுதிகள்... இதெல்லாம் பாக்குறப்ப அது எனக்கு வேறொரு புரிதலையும் பார்வையையும் கொடுத்தது. கேங்ஸ்டர் கதையை விட்டுட்டு அந்த மக்களோட வாழ்க்கையையும் அவங்க பிரச்னையையும் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அவங்க சந்திக்கிற பிரச்னை இந்தியப் பெருநகரங்கள்ல வாழ்கிற எல்லா விளிம்புநிலை மக்களுக்கான பிரச்னையாகவும் இருந்தது. அதன் அடிப்படையில அங்க இருக்கிற தமிழ் மக்களோட தொடர்ந்து உரையாடினேன். அந்த பாதிப்புல முற்றிலும் வேறொரு கதையை உருவாக்கிட்டு சார்கிட்ட போனேன். அதுதான் ‘காலா’ ’’ 

``கபாலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருந்த ரஜினி, `காலா’ கதையைக் கேட்டுட்டு என்ன சொன்னார்?’’

`` 80-கள்ல மும்பையில் வாழ்ந்த ரௌடிகள், அவங்களுக்குள்ள இருக்கிற மோதல்கள்னு கேங்ஸ்டர் கதையைத்தான்  எழுதிட்டு வருவேன்னு சார் எதிர்பார்த்தார். ஆனா, நான் கொண்டுபோனது ஒரு எமோஷனல் குடும்பத்தலைவனோட கதை. ஒரு அப்பா, அவருக்கு நான்கு மகன்கள், கணவன் மனைவி, காதல், பேரன் பேத்திகள், வயதான நண்பர்கள், இப்டின்னு கதை சொல்லிட்டுப் போறப்போ... சார், தலையாட்டி சிரிச்சுக்கிட்டே “இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார். ஆனா, நல்லா இருக்கு.. மேல சொல்லுங்க”ன்னு தாடியைத் தடவிக்கிட்டே கேக்க ஆரம்பிச்சதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏன்னா இந்தக் கதையை அவர் ஏத்துக்குவாரான்னு ரொம்பத் தயங்கினேன். எப்படி இரண்டாவது படமும் ரஜினி உங்களுக்குக் கொடுத்தார்னு சிலபேர் கேக்குறாங்க. ஒருவாட்டி நானே சார்கிட்ட அதைக் கேட்டேன். ‘உங்க வொர்க், உங்ககிட்ட இருக்கிற நேர்மை. இது ரெண்டுதான் உங்களோட படம் பண்ண வெச்சது, இனியும் வைக்கும்’னு சொன்னார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick