சமூக நீதிபதி!

ப.திருமாவேலன்

ட்டப்புத்தகங்களை மட்டுமே பார்த்துத் தீர்ப்பளித்த நீதிபதிகளின் மத்தியில் சமூகப் பார்வையுடன் தீர்ப்பளித்த நீதிபதி அவர். நீதிக்கு இலக்கணம் வகுத்த நீதிபதிகளுக்கு மத்தியில் நீதிபதிகளுக்கும் இலக்கணமாக வாழ்ந்த நீதிபதிகளில் ஒருவர் அவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர் கிராமத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன்பிறகு டெல்லி உச்சநீதிமன்றத்திலும் நீதிநெறிமுறை வழுவா ஆட்சி நடத்திய எஸ்.ரத்தினவேல்பாண்டியன் தனது 89வது வயதில் இறந்துபோனார். ஓய்வு பெற்று கால்நூற்றாண்டு ஆனபிறகும் உற்சாகம் குறையாத மனிதராக வலம் வந்தார்.   முக்கியமான தீர்ப்புகளின் மூலம் வரலாற்றில் வாழும் மனிதர் ரத்தினவேல்பாண்டியன்.

1980-ம் ஆண்டு  ‘மத்திய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு தரவேண்டும்’ என்று பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் ஆணையம் அறிவித்ததை, தொண்ணூறுகளில் வி.பி.சிங் பிரதமர் ஆனபோது ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் அளித்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. 27 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒரே ஒரு விஷயத்தைத்தான் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனியாகத் தீர்ப்பு எழுதி அதில் பெரியார் பெயரையும் வி.பி.சிங் பெயரையும் பொறித்தவர் ரத்தினவேல்பாண்டியன். சட்டநீதி மட்டுமல்ல, சமூகநீதியையும் காப்பாற்றத் தனது பதவியைப் பயன்படுத்தியவர் அவர்.

கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான ஜனதா அரசு கலைக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்கும் மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் 11 வரையறைகளைச் செய்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்விலும் ரத்தினவேல்பாண்டியன் இருந்தார். ‘356வது பிரிவு என்பது இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கட்டற்ற அதிகாரத்தைத் தரவில்லை, ஆட்சியைக் கலைத்தது சட்டவிரோதம் என்று தெரிந்தால் அந்த ஆட்சிக்கலைப்பை ரத்துசெய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு’ என்று அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டது. அதன்பிறகுதான் ஆட்சிக் கலைப்புகள் நடப்பது குறைந்தது. சட்டநீதி மட்டுமல்ல, சமூக நல்லிணக்க நீதியைக் காப்பாற்றவும் தனது பதவியைப் பயன்படுத்தியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!