தெய்வத்தான் ஆகாதெனினும்! - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்

“அது 1994-ம் வருஷம் தோழர். எங்க ஊர், சிவகங்கையைச் சேர்ந்த சூராணம் கிராமம். அங்கே எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், ஊர் மக்களே திரண்டு போராடும் முடிவுக்கு வந்தாங்க. 25 டிராக்டர்ல கிராமமே கிளம்பி கலெக்டர் ஆபீஸுக்குப் போச்சு. அந்தப் போராட்டத்துல எங்க அம்மாவும் கலந்துக்கிட்டாங்க. குண்டும் குழியுமான சாலையில டிராக்டர்ல போயிட்டிருக்கும்போது எங்க அம்மா தவறி விழுந்து பின்னந்தலையில அடிபட்டு உயிருக்குப் போராடினாங்க. அக்கம்பக்கத்துல மருத்துவமனை இல்லாததால, அவங்களைக் காப்பாத்த முடியலை. அவங்க சாகும்போது எனக்கு எட்டு வயசு தோழர்” என்று சொல்லிவிட்டு, அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் அமைதியாகிறார் அருள்தாஸ்.

`ஊரில் அடிப்படை வசதிகளே இல்லை. விளிம்புநிலை மக்களாகிய நம்மைத்தானே இந்த அரசாங்கம் தொடர்ந்து வஞ்சிக்கிறது’ எனச் சிறுவயதிலேயே அருள்தாஸ் உணர்வதற்கு அவர் கொடுத்த விலை, அவரின் அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் தன் கிராமத்து மக்களுக்காக அரசாங்கத்துக்கு மனு எழுதிப் போட்டு நடக்க ஆரம்பித்த அருள்தாஸின் கால்கள் இன்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

உடல் உழைப்புத் தொழிலாளர்கள்,  கட்டடத் தொழிலாளர்கள்,  நடைபாதைத் தொழிலாளிகள்  எனத் தனித்தனியான சங்கங்கள் இருப்பதை அந்த மக்களுக்குத் தெரியப்படுத்தி, அதில் அவர்களை உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கான உரிமைகளை வாங்கிக்கொடுத்துவருகிறார் அருள்தாஸ். இதுமட்டுமன்றி, தமிழகத்தில் எங்கெல்லாம் கொத்தடிமைமுறை இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு, ஊடகங்களின் உதவியோடு அவர்களை மீட்டெடுத்த கதைகள் ஏராளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!