தெய்வங்கள் மீதான போர்!

மருதன்

யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை என்பதால் வீதியின் ஓரத்தில் நின்றபடி இரு கைகளையும் நீட்டிக்கொண்டு, போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் கதறிக்கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. ‘`என் அப்பாவையும் அம்மாவையும் திருப்பிக் கொடுங்கள்!’’

இன்னொரு குழந்தை நடுவீதியில் அமர்ந்து தனியே அழுதுகொண்டிருக்கிறது. கடந்துசென்றுகொண்டிருந்த ஒருவர் கீழே முழங்காலிட்டு அமர்ந்து, தன்னிடமிருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுக்கிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தக் குழந்தை தயக்கத்துடன் கேட்கிறது. ‘`இனி பசியே எடுக்காமல் இருப்பதற்கு உங்களிடம் ஏதாவது மாத்திரை இருக்கிறதா?’’ அவர் குழந்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஓவென்று வெடித்து அழுகிறார்.

சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸுக்கு வெளியில், 15 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது கிழக்கு கவுட்டா என்னும் பகுதி. 2013-ம் ஆண்டு முதலே போரில் உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பகுதி இப்போது மரண ஓலங்களில் புதையுண்டு கிடக்கிறது. உடைந்த கட்டடங்களின் பகுதிகளும் மனித உடற் பகுதிகளும் பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றுகலந்து கிடக்கின்றன. ரத்தம் சொட்டச் சொட்டத் துடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை  எங்களிடம் கொண்டுவர வேண்டாம் என்று அலறுகிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலான மருத்துவமனைகள் இடிந்து கிடக்கின்றன, அல்லது மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. ஆக்ஸிஜன் இல்லை. வலியை மறக்கச் செய்ய மயக்க மருந்துகள் இல்லை. வலி நிவாரணிகள் இல்லை. ஊசிபோட முடியாது. ஓர் ஆக்ஸிஜன் மாஸ்க்கை ஒன்பது குழந்தைகள் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!