அன்பும் அறமும் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எங்கே தொலையக் கொடுத்தோம்?சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

திகாலை நான்கு மணிக்கு அந்த மீன் சந்தைக்கு, நாள்தவறாமல் கடலுக்கு மேலே துள்ளி வரும் சிறு மத்தி மீன் மாதிரி வந்துவிடுவார் அந்த முதியவர். வெள்ளை வேட்டி, சட்டை அந்த நேரத்திலும் மொடமொடப்பாக இருக்கும். சென்னையில் உள்ள நடுத்தர உணவகம் ஒன்றின் உரிமையாளர் அவர். வாங்குவது என்னவோ ஐந்தாறு கிலோவிற்குள்தான் இருக்கும். ஒருதடவை அவரிடம், “இந்த அஞ்சாறு கிலோ வாங்குறதுக்கு ரெண்டு லிட்டர் பெட்ரோலப் போட்டு இந்தக் குளிரிலும் வர்றீங்க. வெளீல யார்ட்டயாவது ஆர்டர் கொடுத்தா அவங்களே வந்து ஹோட்டல்ல தந்துடுவாங்களே” என்றேன். இடமும் வலமுமாகத் தலையை அழுத்தமாக ஆட்டிவிட்டு, “எங்க ஹோட்டல நம்பி சாப்பிட வர்றாங்க. பொருள் தரமா இருக்கும்னு நம்புறாங்க. தரத்திலே ஒரு துளிகூடக் குறைஞ்சிரக்கூடாது தம்பி. நானே நேர்ல வந்து வாங்கினாத்தான் ராத்திரில நிம்மதியாத் தூக்கம் வரும்” என்றார்.

வஞ்சிர மீன் சில நேரங்களில் ஒரு கிலோ வாங்கும் விலையே ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரும். பல பெரிய ஹோட்டல்களிலேயே விலை கூடுகிற சமயங்களில் வஞ்சிர மீன் என்று சொல்லி அரைக் கோலா மீனைப் போடுவார்கள். ரங்கூன் வஞ்சிரம் என்றுகூட அதைச் சொல்வார்கள். மூக்கு நீண்டு வால் குட்டையானால் ரங்கூன். மூக்கு குறுகி வால் நெட்டையானால் வஞ்சிரம். கறுத்தவன் ரங்கூன். கொஞ்சம் வெளுத்தவன் வஞ்சிரம். மனிதர்களைப் போலத்தான் எல்லாவற்றையும் வகை பிரித்துவிட முடியும். வஞ்சிரம் என்று சொல்லித் தட்டில் வைத்தால் கண்டுபிடிக்கவே முடியாது. வறுத்த பிறகு கறுப்பேது, வெளுப்பேது? அதுவும் சாப்பிட உகந்ததுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!