முடி முதல் அடிவரை முறைகேடு... பல்‘களை’க்கழகங்கள்! | Scams, forgeries and perversities in Universities - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

முடி முதல் அடிவரை முறைகேடு... பல்‘களை’க்கழகங்கள்!

வெ.நீலகண்டன், தமிழ்ப்பிரபா, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடக மாநிலங்களை அடுத்து, அதிக அரசுப் பல்கலைக் கழகங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள்.  அரசேகூட நேரடியாகத் தலையிட முடியாதவாறு தனித்துவமான பல அதிகாரங்களைக் கொண்டவை பல்கலைக்கழக நிர்வாகங்கள். சிண்டிகேட், செனட் என பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க ஜனநாயகப் பூர்வமான நிர்வாக அமைப்புகள் உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனி விதிமுறைகளும் உண்டு. ஆனால்  தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக வெளிவரும் குற்றச்சாட்டுகள் பெற்றோர்களை உலுக்கியிருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் மொத்தப் போக்கையும் தீர்மானிப்பவர் துணைவேந்தர். துணைவேந்தரைத் தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. பல்கலைக்கழக செனட் சார்பில் ஒருவரும், ஆட்சிக்குழு (அகாடமி கவுன்சில்) சார்பில் ஒருவரும், அரசுப் பிரதிநிதி ஒருவரும் இணைந்து, விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான மூன்று பேரைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்புவார்கள்.  மூன்றில் ஒருவரை கவர்னர் இறுதி செய்வார். 

“துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவெல்லாம் இன்று சம்பிரதாயமாகி விட்டது. அரசு சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதி யாரை முன்மொழிகிறாரோ அவர்தான் துணைவேந்தர். பணம் இருக்க வேண்டும்; அரசியல்வாதிகளின் பரிந்துரை வேண்டும் அல்லது அமைச்சர்களின் உறவினர்களுக்குத் துணைவேந்தர் பணியைச் சீதனமாகக் கொடுப்பார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்த கற்பக குமாரவேல், முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் மருமகன். அவருக்குப் பிறகு வந்த கல்யாணி மதிவாணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள்” என்று மனம் வெதும்பிக்கூறுகிறார் ஓய்வுபெற்ற பேராசிரியரும் மூட்டா அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான பெ.விஜயகுமார்.