சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

சொல்வனம்

கோடைச் சித்திரம்

கொடுவெயிலில்
தகதகக்கும் நெடுஞ்சாலைகளெங்கும்
எழும்பும் தொடர் அலைகளோடு
ஓடத் துவங்கிவிட்டது கானல்நீர்.
பாதுகைகளற்றப் பாதங்களைப்
பார்ப்பதையும்
அரிதாக்கிவிட்டது கோடை.
கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு
வாட்டத்தோடு நிற்கின்றன மரங்கள்.
எதிர்படும் பெண்களின்
கைக்காம்புகளில் புதிதாய்
இதழ் விரிக்கத் துவங்கிவிட்டன
குடைப்பூக்கள்.
தரை வெடித்த குளத்தில்
தட்டாங்கல்லை இரையாக்கவியலாமல்
மேகங்களைச் சபித்தபடி
தேடலோடு கடக்கின்றன நாரைகள்.
கோடைச் சித்திரத்தின் ஆடை நனைத்து
சுடச்சுடச் சொட்டிக்கொண்டிருக்கிறது
புழுக்கும் வியர்வை.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க