"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது!” - கலங்கும் திருமா

த.கதிரவன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

காவிரிப் பிரச்னை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக இருக்கும் திருமாவளவனைச் சந்தித்தேன்.

“கடந்த காலத்தில், காவிரி நீர் தராமல் தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்துகொண்டு இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சரிதானா?’’

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்ட இந்தச் சூழலில், நாளையே காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டால், அதனை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. இப்போது மத்திய பி.ஜே.பி அரசுக்கும்கூட கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல்தான் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தடையாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அவர்களது நிலைப்பாடுகள் மாறலாம்.

இப்போது, கர்நாடக சட்டசபைத் தேர்தல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதனைப் போராட்டங்கள் வாயிலாக நாங்கள் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறோம், அவ்வளவுதான். இதுவும்கூட பி.ஜே.பி மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல,  அவர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்ற எண்ணத்தில் இருக்கும் பி.ஜே.பி-யினருக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்வது இடைஞ்சலாக இருக்கிறது. அதனால்தான் காவிரி விவகாரத்தில், காங்கிரஸ் மீதும் தி.மு.க மீதும் தேவையற்ற பழிகளைச் சுமத்திவருகிறார்கள்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick