அன்பும் அறமும் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

அக்கறை காட்டுங்கள்!

முழங்கால் அளவு இருக்கும் சதுரக் கம்பி தாங்குமேடை ஒன்றை ஊன்றியபடி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் தாங்கித் தாங்கி  நடந்து போவார் அந்த ஐம்பது வயதுக்காரர். பின்னாலேயே நான் மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு போவேன். முதல் தடவை, எனக்கு வழிவிடுவதற்காகப் பெரிதும் சிரமப்பட்டார். வலியில் கறுத்த தாடைகள் துடித்ததை காருக்குள் இருந்தே அறிய முடிந்தது. ஐந்து நிமிடப் பிரயத்தனங்களுக்குப் பிறகே அவரால் எனக்காக அந்தக் கருவேலம் முற்கள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கி வழிவிட முடிந்தது.

விபத்து ஒன்றில் சிக்கி அவர் முற்றிலும் உருக்குலைந்து இருந்தார். அவர் அருகே போன நான், ``இனிமேல் எனக்காகப் பிரயத்தனப்பட்டுப் பதறிக்கொண்டு வழிவிடத் தேவையில்லை’’ என்று சொன்னபோது, வலியை மீறிச் சிரித்தார். `ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படி தன்னை வருத்திக்கொண்டு எங்கே நடந்து போகிறார்?’ என்ற கேள்வி, இயல்பாகவே என்னுள் எழுந்தது.

அவர் இயலாதவர் என்பதால், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அந்தக் குறிப்பிட்ட நாளில் பெயர் கொடுக்கப்போகிறார் என்பது தெரிந்தது. அதுவரை நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து எனக்கு சிக்கலான பார்வையே இருந்தது. `வேலையே செய்யாமல் குளத்துமேட்டில் அமர்ந்து வெற்றிலையை மென்றபடி ஊர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றுகூட எழுதியிருக்கிறேன். ஆனால், வாழவே வழி இல்லாதவர்கள் பலரின் பிழைப்பு அதை வைத்துதான் ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தபோது, பொத்தாம் பொதுவாக எழுதியதற்காக வெட்கப்பட்டேன். அவர் மட்டுமல்ல, அங்கு குவியும் பல முதியவர்களைப் பார்க்கிறேன். பலரால் கைகளை ஊன்றி பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகே எழுந்து நிற்க முடியும். அப்படியே சப்பக்கென அடுத்த நொடியில் தரையில் அமர முடியாது. அரசாங்கம் ஏதோ ஒருவகையில் இன்னொரு பக்கம் பாயத் துடிக்கிற பணத்தை மடை மாற்றி இவர்கள் பக்கமாகவும் கொஞ்சம் திருப்புகிறது எனத் தோன்றுகிறது. ஒருவகையில் பாவத்தைத் தீர்க்கும் கணக்கு இது என்றுகூடச் சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick