வீரயுக நாயகன் வேள்பாரி - 80 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வீரயுக நாயகன் வேள்பாரி - 80

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

போர்க்கருவிகளின் தொகுப்பாக விளங்கும் படைக்கலப் பேரரங்கு, மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டது. பாண்டியனின் பேரரங்கு மூஞ்சலின் அருகில் இருந்தது. சேரனின் பேரரங்கு தென்புறமும், சோழனின் பேரரங்கு வடபுறமும் அமைக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கான போர்க்கருவிகள் முழுமையும் இங்குதான் சேகரித்துவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரின் பரப்பளவைக்கொண்டிருந்தது. அவற்றுள் பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்தன.

ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொருவிதமான ஆயுதம் வைக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களை ஒழுங்குமுறைப்படி அடுக்கிவைப்பதும், தேவைக்கேற்ப நாள்தோறும் அவற்றை எடுத்து போர்க்களத்துக்கு அனுப்புவதும் தனித்ததொரு கலை. இந்தக் கலையைச் செய்பவரை `ஆயுதவாரி’ என்று அழைத்தனர்.

நான்கு வகையான வில்களும் பதின்மூன்று வகையான அம்புகளும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவிதமான அம்புக்கட்டும் தனித்தனியே அடுக்கிவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எடுத்துத் தர வசதியாக இருக்கும். களம் புகும் வீரன் கையில் ஏந்தியிருக்கும் வில்லுக்குத் தகுந்த அம்புகள் அவனது அம்பறாத்துணிக்கு வந்துசேர வேண்டும்.

ஆயுதங்களை படைக்கலப் பேரரங்கிலிருந்து வீரர்களின் போர்ப்பாசறைக்கு நள்ளிரவுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். பொழுது விடியும்போது அந்தப் பாசறையில் இருக்கும் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் அவர்களின் கண்கள் முன் பளிச்சிடவேண்டும். `என்னை ஏந்திக்கொள்’ என்ற ஆயுதங்களின் அழைப்பை வீரர்கள் உணரவேண்டும்.

படைப் பிரிவுகளின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட வகை வில்லை மட்டுமே பயன்படுத்துபவராக ஒவ்வொரு பிரிவினரும் இருப்பர். அந்த வகை வில்லுக்குப் பொருத்தமான அம்புக்கட்டுகள் அங்கு வந்துசேர வேண்டும். அதில் ஏதாவது குழப்பம் நிகழ்ந்தால், அதிகாலையிலேயே சிக்கல் உருவாகிவிடும். எனவே, ஆயுதங்களை பாசறைக்குப் பிரித்துத் தரும் பொறுப்பை வகிக்கும் `ஆயுதவாரி’ மிக முக்கியமானவராகக் கருதப்படுவார். போர்க்களத்தில் தளபதிக்கு சமமான அதிகாரம்கொண்டவராக போர்களக் கொட்டிலில் ஆயுதவாரி விளங்குவார். 

மூன்று பேரரசுகளும் அனுபவமேறியவர்களைத் தான் ஆயுதவாரிகளாக நியமித்தன. பல நேரங்களில் படைகளின் தளபதியையே சமாளிக்கவேண்டிய பொறுப்பு ஆயுதவாரிக்கு உண்டு. குறிப்பிட்டவகை ஆயுதம்தான் வேண்டும் என்று தளபதி கேட்பார். ஆனால், அந்த வகையான ஆயுதத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கும். எனவே, மற்றவகை ஆயுதத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளிக்க வேண்டும். போர் நெருக்கடிகளுக்கு இடையில் அதிகம் மோதிக்கொள்பவராக தளபதியும் ஆயுதவாரியும்தான் இருப்பர். அதனால் ஆயுதவாரி பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் வயதானவராக இருப்பது அவசியம். அதுவும் தளபதி மதிக்கும் மனிதராக இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனென்றால், போர்களத்தினூடே அவர்களின் தேவைகளையும் இருப்புகளையும் பற்றிப் பேசிக்கொள்ள சில கணங்களே வாய்க்கும். அதற்குள் அனைத்தையும் புரிந்துகொள்பவராகவும் பரிமாறிக்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick