தியா - சினிமா விமர்சனம்

பிறப்பதற்கு முன்பே கொல்லப்ப ட்டதால் பேயாகி, பழிவாங்கும் கதை!  

 நாயகன் நாக சௌர்யாவும், சாய்பல்லவியும் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே சாய் பல்லவி கர்ப்பமாகிறார். உறவினர்கள் நிர்பந்தத்தால் கரு கலைக்கப்படுகிறது. 5 வருடங்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள, கருக்கலைப்புக்குக்காரணமான டாக்டரில் தொடங்கி குடும்பத்திலிருக்கும் பெரிய ஆட்கள்வரை வித்தியாசமான முறையில் பழிவாங்குகிறது ஐந்தே வயதான அந்தக் குட்டிப் பேய். இறுதியில், பிறக்காத தன் குழந்தையிடமிருந்து தன் கணவனைக் காப்பாற்ற சாய் பல்லவி எடுத்த முயற்சிகள் பலித்ததா என்பதே கதை.

 நாயகன் நாக சௌர்யா... அப்பா இறந்தாலும் சரி, பேய் அச்சுறுத்தினாலும் சரி, ஒரேவிதமான முகபாவனை. ஜென் குரு ஆகவேண்டியவர் ஹீரோ ஆகியிருக்கிறார். மகளைப் பிரிந்த சோகம், அடுத்தடுத்த மரணங்களினால் கண்களில் தெரியும் கலக்கம், கணவரைக் காப்பாற்றத் துடிக்கும் பரிதவிப்பு என ஐ.பி.எல்லின் கடைசி 5 ஓவர் போல செம ஸ்கோர் செய்கிறார் சாய் பல்லவி. குட்டிப்பெண் வெரோனிகா அரோரா குறைவான வசனங்களில் கண்களாலேயே மிரட்டியி ருக்கிறாள். ஆர்.ஜே .பாலாஜி காமெடி பண்ணும் போது நமக்கு எரிச்சல் வருகிறது. அவர் சென்டிமென்ட்டாக நடிக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. நகை முரண்!

படத்தின் நிஜமான ஹீரோக்கள் பின்னணி இசையமைத்திருக்கும் சாம்.சி.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளர்  நீரவ் ஷாவும்தான். ஒரு த்ரில்லர் படத்துக்கான உணர்வை ஃபிரேமுக்கு ஃபிரேம் கடத்த இருவரும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

பேய்ப்படங்களில் வரும் வெள்ளை காஸ்ட்யூம், பாத்ரூம் குழாயில் ரத்தம் வருவது, மியூஸிக்கல் பொம்மை, காற்றில் ஆடும் வெள்ளை ஸ்க்ரீன்கள் என எல்லா பேய்ப்பட  செட் பிராப்பர்ட்டிகளும் அப்படியே எடுத்தாளப்பட்டு இருக்கின்றன. பேய்க்கு வயசாகும் என்பதெல்லாம் பேய்த்தனமான சிந்தனையன்றி வேறில்லை.

டிசைன் டிசைனாகப் பேய்ப்படங்கள் எடுப்பது, இறுதியில் சம்பந்தமே இல்லாமல் ‘சமர்ப்பணம்’ டைட்டில் கார்டு போடுவது போன்ற அபத்தங்கள் பற்றியும் ஏதாவது ஒரு சங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் தேவலை.

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick