குழந்தைக் குரல் மறைந்தது!

எம்.குணா

ழலைக் குரல் என்றால் மனதில் வந்து போகும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. சுதர்சனம், கே.வி.மகாதேவன், இளையராஜா, தேவா என்று எல்லாத் தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி மயக்கியவர் சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜ் வெங்கடேஷ், அம்மா குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தியா சுதந்திரம் அடையறதுக்கு முன்னாடியே அவங்க பாடகியாப் பிரபலம் ஆகிட்டாங்க. 1945-ம் ஆண்டு, அம்மாவுக்கு வயசு 12. குமாரி கமலாவுக்காகக் குரல்கொடுத்து ‘மகான் காந்தி மகான்’ என்று அவங்க பாடிய பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். அந்தக்காலத்தில் கிராமபோன் கொலம்பியா இசைத்தட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் விறபனையாகி சாதனை படைத்தது. அம்மாவின் குரலைக் கேட்டு வியந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவரோட ஏ.வி.எம் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் போட்டுப் பாடவைத்தார்.  ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ‘வாழ்க்கை’ படத்தில் நடிகை வைஜெயந்திமாலாவுக்கு முதன்முதலாக  குரல்கொடுத்த  ‘உன் கண் உன்னை ஏமாற்றினால்’ பாடல் பிரசித்தி பெற்றது. ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியபிறகு தனியாகவந்து பாடிய ‘மண்ணுக்கு மரம் பாரமா’,  ‘கோழி ஒரு கூட்டிலே’ பாடல்கள் பெரிதாக பேசப்பட்டதை அறிந்து மீண்டும் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு செட்டியார் அழைத்தார். சாவித்திரிக்காக ‘சிங்காரப் புன்னகை’ பாடலையும், செளகார் ஜானகிக்காக ‘ சின்ன பாப்பா’, ‘படித்ததினால் அறிவு பெற்றோர்’ பாடலையும் பாடினார். சிறுமியாக இருந்தபோது பெரியவர்களுக்காகப் பாடியதும், வளர்ந்ததும் குழந்தைக் குரலில் பாடியதும் அவரது சாதனைகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick