அன்பும் அறமும் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சரவணன் சந்திரன்

இரவு வெள்ளிகள்!

ர் இரவில், எனக்கு முன்னே நட்சத்திரக் கூட்டங்களை வாரி இறைக்கும் வடகிழக்கு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். லட்சக் கணக்கான  கூட்டங்களிலிருந்து ஒரு வெள்ளியை மட்டும் தனித்துப் பார்த்துவிடுகிற தவிப்பு. `வணிகன் குடிகெடுத்த வெள்ளி’ எனச் சொல்லப்படுவது அது. இருள் பிரிவதற்கு முந்தைய நேரத்தில் அதைக் கண்டுகொண்டேன். ஒரு பெரிய அளவிலான மின்மினிப்பூச்சி வானத்தில் அமர்ந்து மினுக்மினுக்கெனச் சிணுங்குவதைப் போல அது விட்டுவிட்டு ஒளிர்ந்தது. இவ்வளவு அழகான இந்த வெள்ளியைத்தான் ஒருகாலத்தில் `குடிகெடுத்த வெள்ளி’ என்று வர்ணித்திருக்கிறார்கள்.

இந்த வெள்ளியைப் பார்த்துவிட்டு ‘விடிந்துவிட்டது’ என நினைத்து தலைச்சுமையைத் தூக்கிக்கொண்டு வியாபாரிகள் அடுத்த ஊருக்குக் கிளம்புவார்களாம். உண்மையில் அது விடியலுக்கான நேரமல்ல; கள்வர்கள் உலவும் நேரம். இந்தக் காரணத்தினாலேயே அதைக் `குடிகெடுத்த வெள்ளி’ என்பார்கள். கள்வர்கள் இன்னமும் அந்த நேரத்தில்தான் விழித்திருப்பார்கள் என்கிறார்கள். எவரையும் போட்டுத் தள்ளிவிடும் தூக்கத்துக்கான நேரம். அப்போதுதான் கள்வர்கள் சுவர் தாண்டிக் குதிக்கிறார்கள். இன்னமும் பேப்பர்களைத் திறந்தால் `அதிகாலைகளில் கதவை உடைத்துக் கொள்ளை’ எனச் செய்திகள் நிதமும் வரத்தானே செய்கின்றன! கள்வர்கள் மட்டுமா இப்போது விழித்திருக்கிறார்கள்?

ஊரடங்கிய சாமம் என்ற வார்த்தைகள் நகரங்களுக்குப் பொருந்தாது. இரவு 8 மணிக்கே தூங்கி, அதிகாலை 5 மணிக்கு விழிக்கும் மனிதர்களுக்கு நடுவே இருந்துகொண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் ஓர் இரவு வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது. அதிகாலை 2 மணியளவில் மீன் ஏலம் எடுக்க, சென்னைச் சாலைகளில் தனியாகச் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறேன். நான் மட்டுமா அந்த நேரத்தில் தனியாக இருந்தேன்? என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்லர்: உழைக்கும் வர்க்கத்தினர். இரவுத் தூக்கத்தை உழைப்புக்குத் தானம் கொடுத்த கூட்டம் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick