“ஒரு கதை சொல்வீங்களா சார்?” | Interview With Teacher Rajandran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/05/2018)

“ஒரு கதை சொல்வீங்களா சார்?”

வி.எஸ்.சரவணன் - படங்கள்: வி.சதிஷ்குமார்

“‘மாடு மேய்க்கும் சிறுவனுக்கு என்னென்ன திறமைகள் இருக்கும்?’ - ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. எல்லோரும் அமைதியாக இருக்க, ஒருவர் எழுந்து, ‘மாட்டை எப்போது குளிக்க வைக்கணும், எப்போது தீனி வைக்கணும்...’ என 22 திறமைகளைப் பட்டியலிட்டார். பயிற்சியாளரின் அடுத்த கேள்வி, ‘பள்ளியில் படிக்கும் மாணவருக்கு என்னென்ன திறமைகள் இருக்கும்?’ எவ்வளவு தூரம் பட்டியலை நீட்டியும் ஏழு, எட்டைத் தாண்டவில்லை. எனக்குள் கல்வி பற்றிய மாற்றுக்கோணத்தைக் ஏற்படுத்திய தருணம் அதுதான்’’ என்கிறார் ராஜேந்திரன் தாமரப்புரா.

கேரளாவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பாடக்குழுவில் பங்களிப்பு செலுத்தியவர். ஒரு சப்ஜெக்ட், அதை வருடம் முழுக்க ஒரே ஒரு கதையின் வாயிலாக மாணவர்களைச் சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் கற்கவைப்பது... என இவர் காட்டும் புதிய கல்விமுறைக்கான நீள் கதைப் பாடத்திட்டம், பலரையும் புருவம் உயர்த்த வைக்கிறது.

“தாமரப்புரா என்பது என்னுடைய வீட்டின் பெயர். தாமரப்புரா என்றால் தாமரை வடிவில் இருக்கும் வீடு. பிறந்தது கேரளாவின் எல்லையோரப் பகுதியிலுள்ள கோழிப்பாறை எனும் கிராமத்தில். தாய்மொழி மலையாளம் என்றாலும், அப்பா என்னைத் தமிழ்வழிக் கல்வியில் சேர்த்தார். ஆசிரியர் பயிற்சி முடித்து, கொல்லம் மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

எங்கள் தமிழாசிரியர் கே.சி.கங்காதரன் பாடப்புத்தகப் பணிமனைக்கு என்னை அழைத்துச்செல்வார். இறுதியாகும் பாடங்களை கார்பன் வைத்து அழுந்த எழுதி காப்பி எடுப்பதுதான் என் வேலை. ஒருமுறை, அவருக்கு உடல்நலம் இல்லாததால், பாடப்புத்தகத்துக்கு ஒரு கதை எழுதச் சொன்னார். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடத்திலும் வைக்கப்பட்டது. நான் எழுதிய கதையை நானே பாடமாக நடத்தினேன். தொடர்ந்து, மாநில அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேதான் என் பார்வையை மாற்றிய அந்த இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன.”