வீரயுக நாயகன் வேள்பாரி - 84

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

வேட்டுவன்பாறையில் இருந்த பெண்கள் கூட்டம் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக் கானம் நோக்கிப் புறப்பட்டது. கூத்துக்களத்தில் இசைக் கருவிகளை இசைக்கக்கூட ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. எல்லாவற்றையும் பெண்களே இசைக்க வேண்டும். எனவே, ஊரில் இருந்த பறை, துடி, முழவு என ஒன்றைக்கூட விடவில்லை. மந்தையில் கட்டியிருந்த காரிக்கொம்பைக்கூட கழற்றி எடுத்துக்கொண்டார்கள். கரைபுரண்ட உற்சாகத்தினூடே கூட்டம் புறப்பட்டது. பெருங்குரைப்பொலியோடு நாய்க்கூட்டமும் மொத்தமாக உடன் சென்றது.

சந்தனவேங்கை, காட்டின் எந்தத் திசையிலும் இருக்கக்கூடியதுதான். ஆனால், கருவுற்ற பெண்ணுக்கான சடங்கைச் செய்ய எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வுசெய்கின்றனரோ அந்த மரம் இருக்கும் பகுதியைத்தான் `வள்ளிக்கானம்’ என்பர். அங்கு நடக்கும் சடங்கு என்னவென்று இன்று வரை ஆண்களுக்குத் தெரியாது. பறம்புப்பெண்கள் காலங்காலமாய்க் காத்துவரும் ரகசியம் இது. இரவெல்லாம் கூத்து நடத்துகிறார்கள் என்று மட்டுமே ஆண்கள் அறிவர். அங்கு என்ன வகையான கூத்து நடக்கிறது என்பதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தச் சடங்கில் பங்கெடுத்துத் திரும்பும் பெண்கள், அதன் பிறகு நெடுநாள்கள் அந்த மகிழ்வைப் பேசிக் களிப்பர். அதுதான் ஆண்களை மேலும் சினமேற்றும். என்னதான் நடக்கிறது அங்கு எனத் தெரிந்துகொள்ள, எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தனர்.  ஆனாலும் இன்று வரை அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick