நோய் நாடுங்கள்... நோய்முதல் நாடுங்கள்!

ண்டிகைக்காலக் கொண்டாட்டத்தை முழுவதுமாகக் கொண்டாட முடியாதபடி பன்றிக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் என்று விதவிதமான காய்ச்சல்கள் தமிழகத்தை பயமுறுத்திவருகின்றன.
தமிழகத்தில் இதுவரை, டெங்குக் காய்ச்சலுக்கும் பன்றிக்காய்ச்சலுக்கும், இன்னும் பெயர் தெரியாத மர்மக்காய்ச்சலுக்கும் பலர் பலியாகியிருப்பதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்  இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து பரவுவது, மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது.

“டெங்கு தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரத்து இருநூறு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை இந்த ஒருவார காலத்தில் அதிகரிக்காமல்  கட்டுப்படுத்தியிருக்கிறோம்’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது ஒருவகையில் ஆறுதல் அளித்தாலும், யதார்த்தம்  வேறுமாதிரியாகவே இருக்கிறது.  ‘ஒரே நாளில் ஐந்து பேர் பலி’,  ‘ஒரே ஊரில் மூன்று பேர் பலி’ என்று தினம் தினம் வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. மாநிலம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. தர்மபுரியில் அரசு மருத்துவமனையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இது போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த  போதிய தகவல்கள் இல்லை.

இந்தக் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதும் மேலும் பரவாமல் தடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான கடமை. ‘மருத்துவ நெருக்கடிநிலை’ என்று அறிவித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளைத் தமிழக அரசு கணக்கிலெடுத்து, போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே வெவ்வேறு காய்ச்சல்களால் தமிழகம் பாதிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகூட டெங்குக் காய்ச்சலுக்கு நாம் 158 உயிர்களைப் பலி கொடுத்தோம். எனவே, இந்தக் காய்ச்சல்கள் வருவதற்கான காரணங்கள் யாவை, வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் யாவை என்பது குறித்த விரிவான ஆய்வு அவசியம். தற்காலிகமான தடுப்பு முறைகளைவிட, தொலைநோக்குப் பார்வைகொண்ட திட்டங்கள் தேவை.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் உணர்த்தியிருக்கிறார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick