சொல்வனம்

ஓவியம் செந்தில்

வளர்பருவம்

னது பூனைக்குட்டி
என்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று
வேறு யாரையோ பார்த்து
வாலாட்டும்போதும்
அதற்கு உணவிடுகிறேன்.

நேற்றைய கொண்டாட்டங்கள்
முகத்தில் நிறைந்திருக்க
‘அய்யோ... உன்னை எப்படி
அழைக்க மறந்தேன்?’
என்று நீ பதைபதைப்பதை
மென்புன்னகையுடன் ரசிக்கிறேன்.

முப்பத்திமூன்று
குட்நைட்டுகளுக்குப் பிறகும்
தூங்கட்டுமா என்று கேட்பவள்
இப்போது
முதல் குட்நைட்டிலேயே
தூங்கிப்போவதை
மிகுந்த சிரமத்துடன்
ஏற்றுக்கொள்ள முயல்கிறேன்.

‘இன்று என்ன நடந்தது தெரியுமா?’
என்று விவரிப்பதை
நிறுத்திக்கொண்ட அந்த நாளிலிருந்து
உனக்கு சுவாரஸ்யமாக எதுவுமே
நடக்கவில்லையென்றே
தீர்க்கமாக நம்புகிறேன்.

சமீபகாலமாக நான்
அதிகமாக டாட்டா காட்டுகிறானோ
என்று தோன்றுகிறது.
விரைவில் டாட்டா காட்டுவதில்
நான் நிபுணத்துவம் பெற்றுவிடுவேன்.

- தி.விக்னேஷ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick