முடியாத பயணம் - கவிதை

சர்மிலா வினோதினி - படம்: மருது, மன்னார், இலங்கை

நீங்கள் எங்கள்
அதிகாலைத் தெருக்களை
பிரித் ஒலிகளால் நிரப்புகிறீர்கள்
ஆன்மிக அலைகளை மீறி
இன்னுமென் காதுகளில் இரைந்துகொண்டிருக்கும்
தாழப்பறந்து வல்லூறாடிய விமானங்களின் இரைச்சல்கள்தான்
மரண ஓலமாகிப் பீறிட்டுப் பாய்கிறது
நீங்கள் எங்கள் செவிகளில் வழியும்படி
அன்பு என்றும் அகிம்சை என்றும்
அதிகப் பிரசங்கம் செய்கிறீர்கள்
மனிதம் உணர்ந்து மதத்தில் நின்று நல்
உணர்வுகளைப் பிணைக்கு முன்
ஆடை களைந்து அம்மணமாக்கப்பட்டு அடக்கி மூடப்பட்ட
எம் சனங்களின் மண்மூடிய குரல்கள்தான்
குத்திக் குடைகிறது இன்னுமென் மனதை
உங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை
உங்களுக்கு எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை
நீங்கள் உங்களது பாதையில் வேகமாக மிக வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறீர்கள்
சாம்பலான எங்களின் வனத்தில் சில விதைகளை காவிக்கொண்டு
அலைகிறதொரு சிட்டுக்குருவி
அதன் தீராத தாகம் ஒரு நிலத்தை
வேண்டி நிற்கிறது
அதன் ஓயாத பரப்பு ஒரு தேசத்தைத்
தேடி நிற்கிறது
அலகு நிறைந்த விதைகளோடு அலையும்
அப்பட்சியின் மௌனக் கதறல்கள்
உங்களின் செவிகளை எட்ட வாய்ப்பில்லை
நீங்கள் உங்களது முயற்சியில்
முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்
எல்லாமும் தீர்க்கப்பட்டதாய் சில காவியங்களை வரைந்து
பல புதுக்கதைகளை எழுதுகிறீர்கள்
முடியாத எங்களின் பயணத்திற்கான பேருந்திற்காகக்
காத்திருக்கிறோம் நாங்கள்
எங்களின் தலைகளுக்கு மேலால்
இன்னும் பறந்துகொண்டுதானிருக்கிறது
அந்த வனப்பட்சி
இருப்பினும்
சனக்கூட்டம் நிரம்பிவழிகின்ற எங்களின் பேருந்தில்
தட்டுத்தடுமாறி ஏறி முட்டிமோதி விழிக்கும் பாட்டிக்கு
என்னாசனத்தை வழங்கி எழுந்து நிற்கையில்
தோமஸ்துதி துவ (நன்றி மகள்) என்று முணுமுணுக்கும் பாட்டியின்
குழிவிழுந்த கண்களை சந்திக்க நேர்கையில்
வறுமை துரத்தி வாழ விரும்பி வடக்கிற்கு வந்து
மீண்டுவராப்பிள்ளையின் வரவு தேடித் தேடித்தான்
தேய்கிறாளோ இந்தக் கிழவி என
எழுகின்ற சிந்தைக்கு
கடிவாளம்தானில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick