சொல்வனம் | Poetry - Ananda Vikata | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

சொல்வனம்

படம்: சசிகுமார்

கீரி (எ) கிரிதரன்

உப்பு நெல்லிக்காய்க்கு அடித்து
பல் ஆடியபோது
நாங்கள் ஆறாம் வகுப்பு.
புளியங்காய் பறிக்கையில்
உடைந்த கல்லறைச் சிலுவைக்காக
மைதானத்தில் மண்டியிட்டபோது
நாங்கள் ஏழாம் வகுப்பு.
இட்லிக்குப் பழையசாதம்
இலந்தைப் பழத்திற்குக் குச்சி ஐஸ்
மாற்றிக்கொண்டபோது எட்டாம் வகுப்பு.
ஏ பிரிவிற்கும் பி பிரிவிற்கும்
இடைப்பட்ட சுவரில்
ஓட்டை போட்டதற்காக
அவன் அப்பா வந்து
மன்னிப்பு கேட்டபோது
நாங்கள் ஒன்பதாம் வகுப்பு.
உள்ளங்கை வியர்த்தொழுகும்
ஒவ்வாமையால்
கணிதப்படம் எல்லாம்
நான் வரைந்து தரும்போது பத்தாம் வகுப்பு.
பெட்ரோல் பங்க் முன்னே
அட்டைப்பெட்டி அடுக்கிய மிதிவண்டியில்
அவன் மறித்தபோது
அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுமுறைக்கு இந்தியா வந்தபோது
தன் வண்டியில் இருந்த பழங்களில்
பேர்பாதி பைகளில் திணித்தபோது
அவனுக்கு மூன்று பிள்ளைகள்.
என்னை அவனைத்தவிர
அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாதே
என்கிற ஒன்றுதான்
கீரி (எ) கிரிதரன் இறந்துவிட்டதாக அறிவிக்கும் ஃபிளக்ஸ் தொங்குவதைப் பார்த்தபிறகும்
என் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு
பட்டுத்துணி எடுக்கப் போகச் செய்கிறது.

 - கண்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close