பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!

‘அய்யா ஒரு நிமிடம்...’

காரசாரமான இலக்கியக் கூட்டங்களில் கேட்கும் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர், பொதிய வெற்பன். சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தின் அனைத்து விவாதங்களிலும் இவரின் பெயர் இடம்பெறும். கவிஞர், நிகழ்த்துகலைஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சனத்தையே படைப்பாகத் தரும் அற்புதப் படைப்பாளி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இவரின் இன்னோர் அழுத்தமான அடையாளம், இலக்கியக் கூட்டங்களில் புத்தகங்களைப் பந்தி வைப்பவர். ஆம்! கல்யாண வீட்டின் பிரதான அம்சமான சாப்பாட்டுப் பந்திபோல, வாங்குபவரின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்குரிய நூல்களை அளிப்பவர். ‘சிலிக்குயில் புத்தகப் பயணம்’ என்பது இவர் நடத்திய புத்தக நிலையத்தின் பெயர். அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...

“பொதியவெற்பன் - இந்தப் புனைபெயருக்கான பின்னணி..?

“இந்தப் பெயர் மட்டுமல்ல, இன்னும் சில புனைபெயர்களும் இருக்கின்றன. எல்லாமே இயக்கங்களின் தாக்கத்தால் பிறந்தவையே. 1968-ம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும்போதே, மு.சண்முகசுந்தர நேதாஜி என்ற இயற்பெயரை வே.மு.பொதியவெற்பன் என்று அரசிதழில் அறிவித்து, அதிகாரபூர்வமாக மாற்றிக்கொண்டேன். என் அம்மாவின் பெயர் வேலம்மா.  ‘வே’ என்பது, அம்மா பெயரின் முதலெழுத்து. ‘மு’ என்பது, அப்பா பெயரின் முதலெழுத்து. தனித்தமிழியக்கத் தாக்கத்தால், கனல் வேந்தி; புதுமைப்பித்தன் தாக்கத்தால், பித்தகுமாரன்; தலித்தியத் தாக்கத்தால் கூத்தப்பறையன்; ‘திகம்பர கவிகள்’ இயக்கத்தின் தாக்கத்தால், சூர்யமுகி; திமுக தாக்கத்தால் மு.வ.தாசன்; சித்தர் மரபுத் தாக்கத்தால் பொதிகைச் சித்தர் என்றும்  ஏராளமான புனைபெயர்களில் எழுதியுள்ளேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick