கரிகாலனும் எடப்பாடிகளும்! | Editor Opinion - Ananda Vikatan | ஆனந்த விகடன்

கரிகாலனும் எடப்பாடிகளும்!

காவிரி என்பது வெறும் நீரல்ல, நம் உயிர்! உடலை விட்டு அந்த உயிர் பிரிந்து செல்வதைக் கண்கூடாகப் பார்த்துக் கதறும் கொடுமையானதொரு நிலைக்கு விவசாயிகளையும் பொதுமக்களையும் தள்ளிவிட்டிருக்கிறது தமிழக அரசு.

தென்மேற்குப் பருவமழை காரணமாக காவிரி பொங்கிவந்தாலும்  அந்த நீர் கடலுக்குச் சென்று சேர்ந்ததே தவிர, பெரும்பாலான ஊர்களுக்குள் இருக்கும் கிளையாறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் என்று எதையும் எட்டிப் பார்க்கவில்லை.

‘இன்னமும் கடைமடையைக் காவிரி எட்டிப்பார்க்கவில்லை’ என்கிற கூக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே, சில வாரங்களுக்கு முன்பு கல்லணைக் கால்வாய் எனப்படும் புது ஆறு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் மொத்தம் வீணாகப் பாய்ந்தோடியது. அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளாகவே முக்கொம்பில் காவிரி ஆற்றின் குறுக்கே இருக்கும் 9 மதகுகள் தற்போது உடைந்திருப்பது, வரலாற்றுச் சோகம். கரிகாலன் கல்லணை கட்டினான், எடப்பாடிகள் கதவணை உடைத்தனர்!

உடைந்தது மதகுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் குட்டும்தான். குடிமராமத்து என்கிற பெயரில் நீர்நிலைகளைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் என்னவாயிற்று? காவிரியில் முக்கொம்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் இதுபோன்ற அணைகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூபாய் எங்கே போகிறது? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

இந்த லட்சணத்தில் லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொட்டி, ‘நீர்மேலாண்மையில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்’ என்று மீடியாக்களில் விளம்பரப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை, எடப்பாடி பழனிசாமியின் அரசு.

‘முக்கொம்பு அணை, 182 ஆண்டுகள் பழைமையானது. விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட மணல் அரிப்பு காரணமாகத்தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது’ என்கிறது தமிழக அரசு. ஆனால், ‘பராமரிப்பதில் காட்டப்பட்ட அலட்சியமும், இடைவிடாமல் நடத்தப்பட்ட மணல்கொள்ளையும்தான் உண்மையான காரணம்’ என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உறுதியான பதில் எதுவும் அரசிடம் இல்லை. பொறுப்பான பதில் சொல்வதற்குப் பதிலாக, “மனிதர்களுக்குக் காய்ச்சல் வருவதைப் போல்தான் மதகு உடைவதும்” என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது, தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல்.

‘தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில்தான் காவிரி ஓடுகிறது. அதனால், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடியாது’ என்று போகிற இடமெல்லாம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே வாயால், ‘தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்தும்வகையில் ஆறுகளின் குறுக்கே ரூ.292 கோடி செலவில், 62 தடுப்பணைகள் கட்டப்படும்’ என்றும் பேசுகிறார்.

இத்தனைக்கும் இதே சமவெளியில் இருக்கும் காவிரியில்தான் நூறாண்டுகளுக்கு முன்பே முக்கொம்பு மற்றும் அணைக்கரை ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்களால் கதவணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கல்லணையும் இந்தச் சமவெளிப் பகுதியில்தான் இருக்கிறது.

2014ஆம் ஆண்டே ‘தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்திலும் அறிவித்தார் ஜெயலலிதா. அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவும் தடுப்பணைகளைக் கட்டவில்லை. மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா வழியில் செயல்படும் அரசு என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி அரசும் தடுப்பணை கட்டாமல், பொய்க்காரணங்களை அடுக்குவதிலேயே குறியாக இருந்தது. இப்போது நிலைமை கைமீறியவுடன் ‘தடுப்பணை கட்டுவோம்’ என்கிறார் அதே எடப்பாடி.

முக்கொம்பு அணை உடைந்ததற்குக் காரணமே அரசின் அலட்சியம்தான் என்று போராடிய விவசாயிகளைக் குண்டுக்கட்டாகச் சிறைப்பிடித்து உண்மைக்கும் நியாயத்துக்கும் சமாதி கட்டப் பார்க்கிறது எடப்பாடி அரசு.

இப்போது மதகுகள் உடைந்ததற்கு எடப்பாடி அரசைக் குற்றம் சாட்டி அறிக்கைப்போர் நடத்துகிறார் ஸ்டாலின். ஆனால், இதே தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்தபோதும் நீரைத் தேக்கிவைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகளை மராமத்து செய்ததாக காகிதத்தில் இருந்ததே தவிர, மராமத்துப் பணிகள் முழுமூச்சுடன் நடக்கவில்லை. இப்படி தங்கள் மீதுள்ள குற்றத்தை மறைத்துவிட்டு, ஸ்டாலின் முதலைக்கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனுமில்லை.

50 ஆண்டுகளாகத் தி.மு.க, அ.தி.மு.க என்று இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும்போதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கோ நீரைத் தேக்கிவைப்பதற்கோ மணல்கொள்ளையைத் தடுப்பதற்கோ சிறு துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் துணையோடுதான் மணல்கொள்ளையே நடக்கிறது.  தேர்தலில் மட்டுமல்ல, மணல்கொள்ளையிலும் எல்லாக் கட்சியினரும் கூட்டு சேர்வதால்தான் மதகுகள் உடைகின்றன.

காவிரியில் நீர் கிடைக்க வேண்டும் என்று நாம் போராடுவதில் எந்தளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதே அளவு நியாயம், ‘மணல்கொள்ளையைத் தடுக்காமல், நீரைத் தேக்கிவைக்காமல், நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் மற்றவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை’ என்பதிலும் இருக்கவே செய்கிறது.

உரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டும்; ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். மதகுகள் உடைந்தது வெறுமனே இயற்கை நிகழ்வு அல்ல; தமிழக அரசின் கையாலாகாத்தனத்துக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் சுரண்டலுக்கும் அடையாளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick