சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

கோல விடியல்

சாலையில் விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களைத்
துரத்திக்கொண்டிருக்கும் நாய்க்கு
இப்போதைக்கு எந்த இலக்குமில்லை
விரையும் வாகனங்களைத் தவிர

யாரோவால் நடப்பட்டு
யாரோவால் தண்ணீர் பாய்ச்சப்பட்டு
யாரோவால் அறுக்கப்பட்டு
யாரோவால் பாரமேற்றி அனுப்பப்பட்ட வைக்கோலொன்று
எடுப்பதற்கு யார் ஒருவரும் இல்லாமல்
தனியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது சாலையில்

கடையில் வடை வாங்கி
தினம்தோறும் ஒரு துண்டை விண்டு வீசும்
பரோபகாரிக்காக
வாகனங்கள் எழுப்பிப்போகும் தூசுகளுக்கிடையே
காத்திருக்கிறது காகமொன்று

இன்னும் திறக்கப்படாத கடைகளின் கதவுகளில்
ஒட்டியிருக்கும் மண்ணில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய பாதங்கள்
புதிதாய் மாறிக்கொண்டேயிருக்கும்
பழைய வீதியில் இறங்கி நடக்கின்றன

ஆரம்பித்துவிட்ட வாகன இரைச்சல்களுக்கு நடுவிலும்
கிளம்பி அடங்கும் தூசுகளுக்கு நடுவிலும்
அவ்வளவு தெளிவாய் அழகாய் மலரும் கோலமொன்று
தன் வெள்ளை மொழிகளால் ஏற்றுகிறது
விடியலொன்றை அத்தனை மனங்களிலும்

- சௌவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick