தோல்வியடைந்த தூய்மை இந்தியா! | Failure of Swachh Bharat Abhiyan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

தோல்வியடைந்த தூய்மை இந்தியா!

‘தூய்மையான இந்தியா’ - மகாத்மாகாந்தியின் மாபெரும் கனவு, அந்தக் கனவை காந்தியின் 150-வது பிறந்தநாளை 2019-ல் கொண்டாடும்போது நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, 2014, அக்டோபர் 2-ல்  ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தைப் பரப்புவதற்காக நாடு முழுவதும் 9 பிரபலங்களைத் தேர்ந்தெடுத்தார். ‘தூய்மை இந்தியா’ தூதுவர்களில் நம்மூர் கமல்ஹாசனும் ஒருவர். ஆனால் காலமாற்றத்தில் கமல்ஹாசனும் தனிக்கட்சி ஆரம்பித்து, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். ஐந்தாண்டுக்காலத்தில் மோடியின் ‘தூய்மை இந்தியா’ வெற்றியடைந்துவிட்டதா? இந்தியாவில் குப்பைகளே இல்லாமற்போய்விட்டதா?

பெயர் மாறியது; ஊர் மாறியதா?

மோடியின் ‘தூய்மை இந்தியா’வுக்கு முன்னோடியாகவே இரண்டு திட்டங்கள் இருக்கின்றன.

வாஜ்பாய் அரசு 1999 ஏப்ரல் 1 அன்றே சுகாதார விழிப்புணர்வுக்கான திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் இந்தத் திட்டம் 2012 ஏப்ரல் 1-ம் தேதி மன்மோகன்சிங் அரசால்  ‘நிர்மல் பாரத் அபியான்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ‘2022-க்குள் இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் சுகாதாரம் மேம்பட்டிருக்க வேண்டும்; திறந்த வெளியில் மலங்கழிப்பதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; ஊரகப்பகுதியில் வாழும் மக்களின் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவேண்டும்; நலவாழ்வுக் கல்வியும் விழிப்புணர்வும் தந்து மக்களிடையே சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; கழிவு  மேலாண்மையை உருவாக்கிட வேண்டும்’ என்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டம்தான்  நிர்மல் பாரத் அபியான் திட்டம். இந்தத் திட்டமும் முழுமையாக வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாது.