எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்? | History of BJP and Congress in Tamil Nadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

‘`அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை’’ - அரசியல் ஆத்திசூடியில் பொறிக்கப்பட்ட பொன் வாசகங்கள் இவை. தேர்தலில் எதிரி கட்சிகளோடு கூட்டணி போடுகிறவர்கள்கூட தமிழகத்தில் பி.ஜே.பி-யைத் தீண்டத்தகாத கட்சியாகவே வைத்திருந்தார்கள். ஒதுக்கப்பட்டிருந்த பி.ஜே.பி-க்கு அரசியல் ஆக்‌ஸிஜன் கொடுத்தவர் ஜெயலலிதா.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்திலும் 1989 தேர்தலில் மூன்று இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட தமிழகத்தில் பி.ஜே.பி வெற்றிபெறவில்லை. இதே நிலைதான் சட்டசபைத் தேர்தல்களிலும். தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது பி.ஜே.பி. முதன்முறையாக 1991 சட்டசபைத் தேர்தலில் ஓர் இடத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தது. பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து வேலாயுதம் எம்.எல்.ஏ ஆனார். அந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக பி.ஜே.பி வாக்கு ஒரு சதவிகிதத்தைக் கடந்தது.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட்டபின்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு அடித்தளம் ஏற்பட்டது. ஐந்து தொகுதிகளை பி.ஜே.பி-க்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. மூன்று தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவிகிதம் 6.86 ஆக உயர்ந்தது.

அ.தி.மு.க-வுடான கூட்டணி 13 மாதங்களில் முறிய... மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அறிவாலயத்துக்குப் படையெடுத்தது பி.ஜே.பி. அங்கே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட, நான்கு இடங்களில் வென்றது. இதன்பிறகு திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ‘எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.’ பி.ஜே.பி-யில் இணைந்த நேரத்தில் கட்சி கொஞ்சம் பலமடைந்தது.

அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தது பி.ஜே.பி. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு, தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க., பி.ஜே.பி போட்டியிட்ட 21 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அது பி.ஜே.பி-க்கு வசதியாகிப்போனது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க