“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்!” | MDMK Leader Vaiko Exclusive interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்!”

ரசியலில், எதிரிகளுக்கு நேராக வார்த்தை வாளெடுத்து கம்பீரமாக முழங்குவதும், உணர்வுபூர்வமான தருணங்களில், சட்டென உடைந்து கண்கலங்குவதுமாக... எப்போதுமே உணர்ச்சிப்பிழம்பானவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காகத் தாயகத்திலிருந்து பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தவரை நேரில் சந்தித்துப் பேசினேன்...

‘‘கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல்... எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அண்ணன் கலைஞர் சுயநினைவுடன் இருந்த காலத்திலேயே அவரை நேரில் சந்தித்து, ‘29 வருடங்களாக உங்களுக்குக் கவசமாக, நிழலாக, உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருந்த இந்த வைகோ, மீண்டும் உங்களிடமே வந்துவிட்டேன். உங்களுக்கு எப்படி இருந்தேனோ அதேபோல், தம்பிக்கு - தளபதிக்கும் உறுதுணையாக இருப்பேன்’ என்று சொன்னேன். அவரது முகமே உணர்ச்சிப் பிரவாகத்துடன் பிரகாசமானது.என்னுடைய பொதுவாழ்க்கையில் இந்தச் சந்திப்பு மட்டும் நிகழ்ந்திராமலேயே போயிருந்தால், இந்த நெஞ்சு வேகாது!

தமிழக அரசியலில், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் இடம் என்பது... காலத்தால், நிரப்பப்பட முடியாதது. கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை கொண்ட தலைவர் இன்று நம்மிடையே இல்லையே என்ற வெற்றிடச் சிந்தனை தோன்றாத அளவுக்கு, எல்லாவற்றையும் யோசித்து, அனைவரையும் அரவணைத்து, கட்சியைக் கட்டுப்பாட்டுடன் கொண்டுசெல்லும் ஆளுமையும் திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தலைவரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது!’’