சொல்வனம் | Solvanam - Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

உறக்கமற்றவர்களின் கனவுகள்

முறம் வாங்கலையோ முறமெனும்
குரல் கேட்டு நாளாயிற்று
சிமென்ட் கொண்டு மூடப்பட்ட
எங்கள் தெருக்களில்.

நல்லதைத் தன்னுள் வைத்துக்கொண்டு
தீயதை வெளித்தள்ளும் முறம்
ஒன்றுக்கு நான்காய்
எங்கள் வீடுகளில் இருந்தபோது
எங்கள் கட்டுத்தரைகளும்
கழனிகளும் மணந்திருந்தன.

எங்கள் வீடுகளில் முறம்
தாராளமாய்ப் புழங்கியபோது
எங்களூரில் மருத்துவமனைகள் இல்லை.

உழைத்த அலுப்பு தீர
உணவுண்டு உறக்கம் தழுவிய நாங்கள்
இப்போதெல்லாம்
புரண்டுகொண்டேயிருக்கின்றோம்
மருந்துகள் உண்டாலும்.

பச்சை மூங்கிலைப்
பக்குவமாய்ப் பிரித்தெடுத்து முறமாக்கி
தங்கள் வயிற்றை நிரப்பியவர்களும்
இப்போது எங்கோ
நகரத்தின் தெருவோரங்களில் உறங்கக்கூடும்
எங்களைப்போல் உறக்கமில்லாமலே
எங்கள் கழனிகளையும்
தெருக்களையும் பற்றிய கனவுகளுடனே.

- தமிழ்த்தென்றல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க