இந்தப் பள்ளியே பாடம்தான்! | Kerala Chittilamchery School Students Social activities - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

இந்தப் பள்ளியே பாடம்தான்!

குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்காகப் போராடி வரும் அரசுப் பள்ளிகள், நூறு சதவிகித ரிசல்ட் காண்பித்துக் கல்லா கட்டுவதற்காக ராணுவக் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் தனியார் பள்ளிகள் இரண்டுவகைகளையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, மருத்துவ உதவி செய்வது என்று அசத்தி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது சிட்டிலஞ்சேரி கிராமம். அங்கு வயல்கள் சூழ அமைந்திருக்கிறது எம்.என்.கே.எம் மேல்நிலைப்பள்ளி. அரசு உதவி பெற்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில்தான், மதிப்பெண்ணைக் கடந்து, சக மனிதனின் வலியைப் பகிரும் வாழ்க்கைப் பாடம் எடுத்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நுழைந்ததும், காய்கறித் தோட்டம், வயல்வெளி போன்றவை வரவேற்க,  “நாம் முகவரி மாறி வந்துவிட்டோமா?” என்ற சந்தேகத்தை வரவைத்தது. “சார், இது ஸ்கூல்தான்” என்று மாணவர்கள் உறுதி செய்தபிறகு உள்ளே சென்று பேசினோம்.

“என்.எஸ்.எஸ் மூலம் பல்வேறு சமூகச் சேவைகளைச்  செய்துவருகிறோம். மாணவர்களே தங்களது சொந்த உழைப்பின் மூலம் ஐந்து பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதற்காக, விவசாயம் செய்வது, பினாயில், சோப், ஊதுபத்தி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வது என்று முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்பில் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. இதுதவிர, வடக்கஞ்சேரிப் பகுதியில் பேருந்து நிறுத்தத்துக்கான நிழற்குடை கட்டித்தந்தது, காலே வைக்க முடியாமல் குப்பைகளால் நிரப்பப்பட்டிருந்த சிட்டிலஞ்சேரிப் பேருந்து நிலையத்தை பளிச்சென மாற்றியமைத்தது என்று ஏராளமான பணிகள் செய்துவருகின்றனர். மாணவர்கள் வெறும் நான்கு சுவர்களில் அமர்ந்து பாடம் படித்து, தேர்வு எழுதி வந்தால் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் எப்படித் தெரியும்?  சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து, அதைச் சரி செய்வதற்கான வழியையும் இப்போதே தெரிந்துகொண்டால், படித்து முடித்துவிட்டு வெளியில் வரும்போது மாணவர்கள் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள்.