இறையுதிர் காடு - 20 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

இறையுதிர் காடு - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று  கன்னிவாடி நோக்கி புலிப்பாணியும் சங்கனும் சென்றுவிட்ட நிலையில், போகர் பிரான் குடிலுக்குள் திரும்பிச் சென்றார். அதுவரை அமைதியாக இருந்த அஞ்சுகன், அவரைப் பின்தொடர்ந்து உள்ளே அவர் முன் சென்று நின்றான். போகர் நாள் தவறாமல் யோகப்பயிற்சி செய்வார். அதற்கு இசைவாக முக்கோணக் கச்சுடுத்திக்கொண்டவராகத் தரைமேல் அமர்ந்து தனுராசனம் செய்யத் தொடங்கினார். ஓர் அம்பு பூட்டிய வில்லைப்போல் ஒரு கால் மடித்து ஒரு கால் நீட்டி, நீட்டிய காலின் கட்டைவிரலைக் கைவிரலால் பிடித்தபடியே அஞ்சுகனைப் பார்த்தார். அவனும் பேசத் தொடங்கினான்.

``குருபிரானே...’’

``சொல்.’’

``எங்களை உச்சியில் விட்டுவிட்டு தாங்கள் தனியே திரும்பிவிட்டீர்களே?’’

``எவருடைய தியானமும் தானாய் இயல்பாகக் கலைய வேண்டும் - கலைக்கக் கூடாது என்று உங்களுக்கு நான் உபதேசித்திருப்பதை மறந்து விட்டாயா?’’

பேச்சோடு பேச்சாக அவரிடம் பயிற்சி ஒரு பக்கம் தொடர்ந்தது.

``அதை அறிவேன்... அதேசமயம் உதயவேளையில் நாங்கள் கண்ட ஓர் அதிசயக் காட்சி குறித்துக் கூறுவதே இப்போது என் நோக்கம்.’’