சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/02/2019)

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

களைத்துப் பறந்துவருகிறது குருவி...

பெ
ரும்புயலின் விசையால்
துடைத்தெறியப்பட்ட
மரங்களிலில்லா தேசத்தில்
தரைபடர்ந்திருக்கும்
சிறு புற்களை
மேய்ந்துகொண்டிருக்கிறது
ஆட்டுக்கூட்டம்.
மரங்களில் அமர்ந்தே பழகிவிட்ட குருவியொன்று
தரை அமரத் தயங்கி
ஒவ்வொரு ஆட்டின் மேலாய் உட்கார்ந்து
ஒருவழியாய்
பகலைக் கடந்துவிட்டது.
இள இருட்டிலேயே
திரும்பிவிட்ட
ஆட்டுக்கூட்டத்தின்
கடைசி ஆடும் கைவிட்டுவிட
பறந்துவரும் குருவிக்கு
தற்போது களைக்கத் தொடங்கியிருக்கிறது.
தயவுசெய்து
தங்கள் கையிலிருக்கும் காகிதத்தை
கீழே வைத்துவிட்டு
அவசரமாய்
இருகரங்களையும்
பக்கவாட்டில் நீட்டுங்கள்
களைத்துவரும் குருவி
வந்தமர ஏற்றவாறு...

-  சாமி கிரிஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க