அம்முவின் வண்ணக் கடல் - கவிதை

செல்வி ராமசந்திரன்

னக்கு மட்டுமே
அம்மு காட்டும்
அவளது ஓவியங்களை
இன்று நான் எல்லோரிடமும் காட்டினேன்
அம்முவின் ஓவிய வண்ணங்களால்
எனது இன்றைய மாலை
அழகாகிவிட்டது என்றாள் என் தோழி
அவை வண்ணங்களின் கடல் போல
இருக்கின்றன என்றாள்

ஒருகாலத்தில்
அம்மு
கறுப்பு வண்ணத்தில் மட்டுமே வரைந்துகொண்டிருந்தாள்

கறுப்புக் கடல்
கறுப்பு வானம்
கறுப்புப் புல் வெளி
கறுப்பு மரங்கள்
கறுப்பு நிலவுகள்
கறுப்பு வானவில்கள்
ஒருமுறை கறுப்பு அன்னத்தை
அவள் வரைந்தபோது
அவளின் ஆசிரியை
மனம் உடைந்துபோனாள்
`இந்தக் குழந்தையின் இதயத்தில்
இவ்வளவு இருட்டை
எங்கிருந்துகொண்டு வந்தீர்கள்?'
என்றாள் கண்ணீருடன்

நான் அவளிடம் சொல்லவில்லை
ஒரு நீண்ட காலம்
அம்முவும் நானும்
நூறு நூறு கறுப்புக் கடல்களை
நீந்திக் கடந்திருக்கிறோம் என்று
அடர்ந்த கறுப்பு வனங்களில்
வழி மயங்கி நின்றோம் என்று

இப்போது
அம்மு வண்ணங்களின் கடலுக்குள்
நீந்திக்கொண்டிருக்கிறாள்
அவளது உலகில்
எல்லாம் அவளது அசலான வண்ணங்களுக்குத்
திரும்பிவிட்டன
கறுப்பு என்பது
இப்போது அவளது இதயத்தின் வண்ணமாக இல்லை
கறுப்பு என்பது
அவளது தனிமையின் வண்ணமாக
அவளது பயத்தின் வண்ணமாக இல்லை

கறுப்பு இப்போது
அவள் வரைந்த மரத்தில் அமர்ந்திருக்கும்
குயிலின் வண்ணமாக மட்டும் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick