சுதந்திரம் - கவிதை

இரா.செந்தில் கரிகாலன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

மாநகரத்துச் சாலைகளில்
இவன் இன்னார் மகன்
என்கிற தேடல் யாரிடத்திலும் இல்லை
குறுக்கு நெடுக்காக
இடித்துக்கொண்டு காய்கறி வாங்கும்
கடைத்தெருக்களில்
இடித்தவள் என்ன சாதிக்காரப் பெண் என
யாரும் யோசிப்பதில்லை
பீச் மணலில் அருகில் அமர்ந்திருப்பவனின்
உடை குறித்தொரு
ஏளனப் பார்வையில்லை
முன் அறிமுகமில்லாமல்
மால்களில் சிரிக்கும்
அழகுப் பெண்களின்
நடத்தை குறித்து
வசைச்சொல் இல்லை
கிராமத்தில் நகரத்தில் இல்லாதொரு சுதந்திரம்
இங்கு மட்டும் எப்படியெனக்
காரணத்தைத் தேடினேன்
இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும்
வந்து சேர்ந்தவர்களாக இருந்தார்கள்
பூமிக்கும் நாம் வந்து சேர்ந்தவர்கள்தானே
அதை மட்டும் ஏன்
அங்கெல்லாம் மறந்தார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick