சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

நட்சத்திரப் பாட்டிகள்

தை சொல்லும் பாட்டிகள்
வாய்க்காத பிள்ளைகள்
ஒதுக்கப்பட்ட தனியறையில்
கைப்பேசியில் விளையாடுகிறார்கள்.

சலித்த பொழுதில்
ஆளுயர டெடிபியரைக் கட்டிக்கொண்டு
கதை சொல்கிறார்கள்.

வெயிலோடு சினேகம் கொண்டு
வெளியில் சுதந்திரமாய் விளையாடும்
சக தோழர்களின்
உற்சாகக் குரல்களைக் கேட்டமாத்திரத்தில்
ஓட்டுக்குள் நத்தையெனச் சுருங்குகிறார்கள்.

தோட்டத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
இவர்கள் நெஞ்சங்களிலும்
கொஞ்சம் மகிழ்ச்சி வண்ணத்தை
மிருதுவாய்த் தடவிவிட்டுப் போகின்றன.

இரவு மொட்டைமாடியில்
வானத்தை வெறித்தபடி
பரிதாபமாய்ப் பார்த்துப்
படியிறங்கும் அவர்களின்
ஏக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு
நிலவு இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு
இறங்கிவரும் நட்சத்திரப் பாட்டிகள்
கனவில் தங்கள் மடியமர்த்திக்
கதை சொல்லத் தொடங்குகிறார்கள்.

 - தமிழ்த்தென்றல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick