தடைகள்தான் சவால்!

சூழல் காக்க... ஞெகிழி நீக்கு

னவிலும் நனவிலும் கிரிக்கெட்டைச் சுமந்து வாழும் பெண், தன் இலக்கை எட்டுவதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை அபாரமாக அம்பலப்படுத்தியிருந்தது ‘கனா’ திரைப்படம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நிஜ கிரிக்கெட் வீராங்கனையைப் போலவே கிரிக்கெட் ஆடி அசத்தியிருந்தார். அவரை அப்படித் தயார்ப்படுத்தியவர் ஆர்த்தி சங்கரன். தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். கிரிக்கெட் வீரர் வி.சிவராமகிருஷ்ணனின் மருமகள். அவரைச் சந்தித்தோம், கனா தொடங்கி இந்திய மகளிர் கிரிக்கெட் அரசியல் வரை நிறைய உரையாடினோம்.

 ``என் அண்ணன் கிரிக்கெட் விளையாடப் போகும்போது வேடிக்கை பார்க்க நானும் போவேன். அப்போ பெண்களுக்கான ஸ்டேட் டீம் இருக்கிறதோ, பெண்கள் கிரிக்கெட் இருக்கிறதோ தெரியாத வயசு. என் ஃப்ரெண்ட் ஒருவர், `எத்திராஜ் காலேஜ்ல கிரிக்கெட் ஆடப்போறேன். நீயும் வாயேன்’னு கூப்பிட்டாங்க. `முன்னபின்ன விளையாடினதில்லையே’ன்னு சொன்னேன். `பரவாயில்லை வா’ன்னு கூட்டிட்டுப் போனாங்க. விளையாட்டா ஆரம்பிச்ச விளையாட்டு, இன்னிக்கு வாழ்க்கையா மாறியிருக்கு’’ அடக்கமான அறிமுகம் தருகிறார் ஆர்த்தி.

``பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சேன். க்ளாஸ்ல உட்கார்ந்தா எதுவுமே புரியாது. அதுலேருந்து தப்பிக்கவே கிரிக்கெட் விளையாடப் போயிடுவேன். ஒருகட்டத்துல கிரிக்கெட்டுல நான் ரொம்பத் தீவிரமா இருக்கிறதைப் பார்த்துட்டு `பொம்பளக் குழந்தையாச்சே... எங்கேயாவது அடிபட்டுட்டா என்ன செய்றது?’னு வீட்டுல பயந்தாங்க. அப்புறம் கிரிக்கெட்டுலேருந்து என்னை மீட்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், பெரும்பாலும் கல்யாண வாழ்க்கையைத் தவிர்த்திடுறாங்க. அவங்க ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிற குடும்ப வாழ்க்கை அமையுறது ரொம்பவே கஷ்டம். அந்த வகையில நான் அதிர்ஷ்டசாலி. மாமனார் சிவராமகிருஷ்ணன், கணவர் நிகில், மைத்துனர் வித்யுத்னு எல்லாருமே பிளேயர்ஸ். கிரிக்கெட் தெரிஞ்ச குடும்பம். கல்யாணமாகி, குழந்தை பிறந்திருந்தபோதே நான் கோச்சுக்காக குவாலிஃபை ஆகியிருந்தேன். `உன்கிட்ட திறமை இருக்கு... ஏன் வேஸ்ட் பண்றே? குழந்தையை  நான் பார்த்துக்கிறேன். நீ போய் கோச் பண்ணு’ன்னு அம்மா சொன்னாங்க. 2012-லிருந்து கோச் பண்றேன்’’ என்கிற ஆர்த்திக்கு, 8 வயதில் உத்தரா என்ற மகள் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick