கண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்

தமிழ் படி... தடம் பதி

முளைக்கட்டிய தானியம்போல
மனசின் அத்தனை பரப்பிலிருந்தும்
துளிர்விடும் உன் நினைவுகளை
அடங்கா ஆச்சர்யத்துடன்
அதிசயிக்கிறேன் கண்ணம்மா
வழிகாட்டுதல்களையும்
ஒழுக்க விதிகளையும் முட்டித்தள்ளி
முளைவிடுவதுதான் காதலில்லையா?!
பெருக்கெடுத்து ஓடும்
வெள்ள நேரத்து வாய்க்கால்
எங்கே உடைத்து
எப்படியெப்படி வெளியேறுமென
யார் அறிவார் கண்ணம்மா?
எதேச்சையாக அரும்பியதெனினும்
அது இயற்கையின் விளையாட்டென்றும்
அதிர்வுகளென்றும் நீயோ, நானோ
மறுப்பதற்கில்லையே
இப்போதேனும் இவ்வளவு பூக்களை
கொடையளித்த இறைவனின்
பாதக் கமலத்தில் இடுங்கிக்கொள்ளத்தான்
இத்தனையுமா கண்ணம்மா?
ஒரே விநாடியில்
ஒளி தளும்பும் நம்முடைய
உரையாடல் கங்கிலிருந்து
ஆயிரமாயிரம் அகல் விளக்குகளை
ஏற்றிக்கொள்வதன்றி
வேறேதும் வழியிருக்கிறதா
கண்ணம்மா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick