தய்.கந்தசாமி கவிதைகள் | thai kandasamy Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

தய்.கந்தசாமி கவிதைகள்

தய்.கந்தசாமி - ஓவியங்கள்: ரவி

புயல் பாடம்

பை
த்தியம் பிடித்த காற்று
கிழக்கின் நிழல்களைப் பிடுங்கி
மேற்குக் கடலில்
வீசிப் போனது

வங்கோடைகளால் சபிக்கப்பட்ட
வளநாடெங்கும்
மரங்களின் பிணங்கள்

பனைகள் மட்டும் நிற்கின்றன
திசைகள் கோடியென
நிரூபிக்க
காற்று ஆடிய வெறியின்
அசைக்க முடியா சாட்சியாக

அறுந்த நினைவுகளின்
சல்லிவேர்களைக் காட்டியபடி
சருகாய்க் கிடக்கின்றன
தோப்புகள்

முன்னறிவித்துவிட்டு
அது நடத்திய தாக்குதலில்
குலைந்துபோயின
மனக்கோட்டைகள்
பஞ்ச பூதத்தில் ஒன்று
பத்து கோடி பூதமாகி
படை நடத்திய பாதையில்
பஞ்சத்தின் தழும்புகள்

தலைமுறை சேமிப்பை
களவாடிக்கொண்ட காற்று
அட்சய பாத்திரத்தை
திருவோடாக்கித்
திருப்பிக் கொடுத்தது

பசியில் நீண்ட கரங்களில்
திரும்பவும் விழுந்தது
செங்கோலின் பிரம்படி

வயிறுகளை
நெடுஞ்சாலை வரை
நீட்டியவர்கள்
திருட்டுப் பட்டத்துடன்
திரும்பினார்கள்

வரமென்று நினைத்து
வாக்களித்த
பாவத்தின் சம்பளம்
சாபமெனக் கற்பித்த
புயற்காற்று போற்றுதும்
புயற்காற்று போற்றுதும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க