சோறு முக்கியம் பாஸ் - 64 | Hotel Review: Tanjavur military hotel - kattayan chettiar mess - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

சோறு முக்கியம் பாஸ் - 64

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சிதம்பரத்துக்கு அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்திலிருந்து சென்னை மாப்பிள்ளையாக கட்டையன் செட்டியார் வந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று அவரது சந்ததி நான்கு தலைமுறையாக விருத்தியாகிவிட்டது. ஆனாலும் சென்னை, பூங்காநகரில் கட்டையன் செட்டியார் அழியாப் பெயராக நிலைத்திருக்கிறார். பிராட்வே, சென்ட்ரல் பகுதிகளில் ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள், பூக்கடை, பழக்கடைக்காரர்கள் என யாரைக் கேட்டாலும் கட்டையன் செட்டியார் மெஸ்’ஸுக்கு வழிகாட்டுகிறார்கள்.

பரபரப்பும் இறுக்கமும் நிறைந்த பூங்காநகர், ராசப்ப செட்டி தெருவில், கந்தகோட்டம் கோயிலுக்கு அருகில் இருக்கிறது இந்த மெஸ். முகப்பில் பெரிய போர்டு... `தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டல்’ என்று எழுதி அருகிலேயே `கட்டையன் செட்டியார் மெஸ்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதிகபட்சம் 180 சதுர அடி இருக்கலாம். அவ்வளவுதான் உணவகம். ஒரு மூங்கில் பாயைக் கட்டி முகப்பை அடைத்து சிறு வழி அமைத்திருக்கிறார்கள். முகப்பில் கல்லா. சிசிடிவி, கம்ப்யூட்டர் பில்லெல்லாம் உண்டு. இன்னொரு பக்கம் சூட்டுக்கல்லால் வடிவமைக்கப்பட்ட கரி அடுப்பு. ஓர் அடுப்பில் அகன்ற தோசைக்கல் கனன்றுகொண்டிருக்கிறது. இன்னோர் அடுப்பில் எலும்புக்குழம்பு கொதித்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பெரிய பெரிய செம்புப் பாத்திரங்களில் குழம்பு வகைகளையும் தொடுகறிகளையும்  மூடி வைத்திருக்கிறார்கள்.
 
 இதெல்லாம் போக, இருக்கிற சிறு சிறு இடங்களில் அமர்ந்து சாப்பிட ஸ்டூல்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். நெருக்கியடித்து அமர்ந்தாலும் எட்டுப் பேருக்கு மேல் உட்கார்ந்து சாப்பிட முடியாது.
`முன்னெல்லாம் உக்கார மணைப்பலகைதான் போட்டிருந்தோம்; கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் ஸ்டூலுக்கு மாறினோம்’ என்று சிரிக்கிறார் இப்போது உணவகத்தை நிர்வகிக்கிற கங்காதரன். கட்டையன் செட்டியாரின் நான்காவது தலைமுறை.

அடுப்பு, சமையல் பாத்திரங்கள், சமையல் முறை எல்லாவற்றிலும் அதே பழைமை. செம்பு டம்ளரில்தான் தண்ணீர் தருகிறார்கள். வாழையிலையில் பரிமாறுகிறார்கள். பார்சலுக்கு மந்தார இலை பயன்படுத்துகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க