கான மயில் வாழ... | The Great Indian Bustard: identity of India - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

கான மயில் வாழ...

ள்ளே நுழைந்து சில நூறு மீட்டர்களே சென்றிருப்பேன். அதற்குள்ளாகவே அதைப் பார்த்துவிட்டேன். அதுவும் நூற்றைம்பது மீட்டர்கள் தூரத்திலேயே. அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பறவைதான் இந்தக் கான மயில். அதை இவ்வளவு அருகில் பார்ப்பேனென்று கற்பனைகூடச் செய்யவில்லை. அதைப் பார்க்கத்தானே ஆரவல்லி மலைத்தொடருக்குச் சென்றிருந்தவன் இருபது மணிநேர ரயில் பயணத்தில் தார் பாலைவனத்துக்கு, பாகிஸ்தானின் எல்லையில் அமைந்திருக்கும் ஜெய்சல்மருக்கு வந்து சேர்ந்தேன். ஒருகாலத்தில் தமிழகம் முழுக்கப் பரவலாக வாழ்ந்துகொண்டிருந்தன கான மயில்கள். மூன்றரை அடி உயரம்வரை வளரும் நாட்டின் உயரமான பறவை கானமயில். உச்சந்தலையில் தொடங்கும் கறுப்பு நிறம் கண்களுக்கு மேலேயே நின்றுவிட்டால் பெண் கானமயில். அதுவே கண்களின் பாதிவரை வந்தால் ஆண் கானமயில்.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி”


என்கிறது மூதுரை. இங்கு ஔவையார் பேசியிருப்பது தோகை விரித்தாடும் மயில் குறித்தல்ல. ‘கானல் மயில்’ என்றழைக்கப்பட்ட கான மயில் பற்றித்தான். இனப்பெருக்க காலங்களில் ஆண் கான மயில் தன் உடலின் முன்பகுதியில் இறகுகளை விரித்து நின்று இணையை ஈர்க்கப் பாடும். அதையே அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்படிப் பேசப்பட்ட பறவைகளைத் தற்போது எங்குமே காணவில்லை. தமிழகத்தில் கடைசியாக 1970 வாக்கில் விமானி ஒருவரால் சூலூரில் ஒரு கான மயில் பார்க்கப்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற இடங்களில் மட்டுமே அவை தற்போது வாழ்கின்றன. அதிலும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் ராஜஸ்தானின் ஒரு பகுதியில்தான் அதிகமாக வாழ்கின்றன. நாட்டில் இப்போதிருக்கும் மொத்தக் கான மயில்களின் எண்ணிக்கை சுமார் 160. அதில் இரண்டில் ஒரு பங்கு ராஜஸ்தானில் வாழ்கின்றன. மற்ற பறவைகள் குஜராத், கர்நாடகா, ஆந்திரா என்று ஆங்காங்கே மிகச் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றன. இல்லை, தம் இனத்தின் இருப்பைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டி ருக்கின்றன. நாட்டின் தேசியப் பறவையாக நிர்ணயிப்பதற்கு மயிலோடு கான மயிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இதன் பெயர் தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு (The Great Indian Bustard). இறுதி வார்த்தையின் உச்சரிப்பு சிறிது தவறினாலும் ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக மாறிவிடும் என்ற ஒரே காரணத்தாலேயே கான மயிலைத் தவிர்த்து மயிலைத் தேர்ந்தெடுத்தார்கள்.

[X] Close

[X] Close