சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

கற்காலத்தவனின் மஜ்ஜை

கற்காலக் குகைகளில்
பச்சை மை பயன்படுத்தியதாக
ருசுப்படுத்த முடியாது யாராலும்
பூமிக்கான நீதி
தேவைப்படாதிருந்த காலம் அது
வேர்களையும் இலைகளையும்
கனிகளையும் விதைகளையும்
கூடவே பொங்கிப்பிரவாகித்த நதிகளையும்
உற்றுநோக்கிய மனிதன் வாழ்ந்த காலம் அது
அப்போது வானம்
அடர் நீலவண்ணமாய் இருந்தது
பிறகுதான் வெளிறியது
செம்பழுப்பு நிறத்தில் செப்புக்காலம்
தொடங்கிய பிறகு
அப்பொழுது குகை ஓவியச் சிவப்பிலிருந்து
பூமிக்கான நீதி வழிந்து நதியோடு கலந்ததை
செப்புக்காலத்தான் கண்டுகொண்டான்
கைநிறைய அந்தி மஞ்சளைப் பூசிக்கொண்டு
அள்ளியெடுத்து நீதியின் கண்களை
நட்சத்திரங்கள் மின்னுமெனச்சொல்லி
நைச்சியம் பேசிக் கருந்துணியால் கட்டிவிட்டான்
அப்பொழுதே செப்புக்காரன் பச்சை மையை
பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தான்
வட்டாட்சியரின் பையிலிருந்து வழிந்ததாகச் சொல்லப்படும் பச்சை மை
செப்புக்காரனின் நீட்சிமை
இழுத்து மூடச்சொல்லி வந்த உத்தரவும்
செப்புக்காரனின் மஞ்சள் பூசிய கை
அள்ளியெடுத்து கண்கட்டி வைத்திருக்கும்
நீதியின் மாட்சிமை என்று
நியூட்ரினோவில் சொல்லப்படும் கேளுங்கள்
செப்புத் தோட்டாக்கள் தேவைப்படுவதை
பகிரங்கமாய்ச் சொல்லிவிட்டு
மிக ரகசியமாய்
பச்சை மை கொண்டு அழிப்பார்கள்
வானம் இப்போழுது
வெள்ளையாக இருக்கிறது பாருங்கள்
மிக நிச்சயமாக சமாதானம் இல்லை
நம்புங்கள்
கற்காலத்தவனின் மஜ்ஜை
இடுப்பெலும்பில் ஊரும்போது
தயை செய்து புரண்டு மட்டும் படுத்துவிடாதீர்கள்.

- கோகுலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close