நான்காம் சுவர் - 34 | Naangam suvar: Writer Backyam Sankar Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

நான்காம் சுவர் - 34

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர்

திருவிழாக் காலங்களில்தான் சிலரைப் பார்க்கமுடிகிறது. குல்லா விற்பவர்களில் இருந்து குரங்கை பல்டி அடிக்க வைப்பவர்கள் வரை கடை விரித்துவிடுகிறார்கள். ஒரு கையில் வளையல்களைத் தினுசு தினுசாக மாட்டிக்கொண்டு வளைய வருகிறார்கள். ராட்டினங்களின் பற்சக்கரத்துக்கு கிரீஸ் தடவுகிறார்கள். சிறிய வட்டவடிவில் தண்டவாளங்களில் பொம்மை ரயிலில் குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்கள். திடீரென தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த யாசகர்களும் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டு கையேந்துகிறார்கள். கரகாட்டக்காரர்களும் மயிலாட்டக்காரர்களும் போன வருடம் பார்த்த அதே புத்துணர்ச்சியோடு ஆடிக்கொண்டிருக் கிறார்கள். ஜேப்படிக்காரர்கள், வேட்டையில் களம் புகுகிறார்கள். ஒரு பொம்மை நாய், போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருக்கிறது. அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய குழந்தை, அப்பாவைப் பார்த்து நாயை அமுக்குகிறது. `வவ்...வவ்’ என்று குரைப்பதைப் பார்த்து சந்தோஷம்கொள்கிறது குழந்தை.

``இந்த மூணு நாளு திருவிழாவுக்கு அப்புறம் இவங்க எல்லாரும் எங்கடா இருப்பாங்க?” மாறனிடம் கேட்டபோது, ``திருவிழா எங்க நடந்தாலும் அங்க கடைய போட்ருவாங்க மச்சி...” என்று சொன்னான். யோசித்துப்பார்த்தால், இவர்கள் இல்லையெனில் திருவிழாவை `திருவிழா’ என்று நம்மால் சொல்ல முடியாமல் போகும். பட்டுத்துணியில் தேர்போல நடந்து வரும் பெண்களுக்கு, ஒரு முதியவர் மருதாணி வைத்துவிடுகிறார். தாவணிகள் சூழ அவரது முகத்தை சீரியல் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நீங்கள் பார்க்க வேண்டுமே... அவ்வளவு பிரகாச மாக ஜொலித்துக்கொண்டிருக்கும்.  காலம் காலமாக அந்த முதியவர் வைத்துக்கொண்டி ருக்கும் மருதாணியின் சிவப்பு, ரத்தத்தைப்போல கனிந்து வந்திருக்கிறது கைகளில். வருடம்தோறும் இந்த மூன்று நாள்கள் இவரை போகிற வருகிறபோது பார்ப்பேன். அவ்வளவுதான்.