திருமணம் - சினிமா விமர்சனம் | Thirumanam: Cinema review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

திருமணம் - சினிமா விமர்சனம்

வாரிசுகளின் திருமணத்துக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு அந்தக் கடனை அடைக்கப் பெற்றோரும், திருமணத்துக்குப் பிறகு குடும்பம் நடத்தும் செலவுகளுக்கு மணமக்களும் படும்பாட்டைக் கண்டித்துக் குரல் கொடுத்திருக்கிறார் சேரன். இக்காலத் திருமணங்களில் செய்ய வேண்டிய சில திருத்தங்களைச் சொல்கிறது அவரது ‘திருமணம் : சில திருத்தங்களுடன்.’

மணமகன் உமாபதி ராமய்யா நடிப்பில் ஜஸ்ட் பாஸென்றாலும், நடனத்தில் ஏ கிரேடு வாங்குகிறார். மணப்பெண், காவ்யா சுரேஷ் சில இடங்களில் சோபிக்கிறார், சில இடங்களில் சோதிக்கிறார். பெண்ணின் அண்ணன் அறிவுடை நம்பியாக வரும் சேரன், அட்சதைக்குப் பதில் அட்வைஸ் தூவுகிறார். சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, பாலசரவணன் என்று சுற்றமும் நட்பும் படத்தின் தேவையறிந்து நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையாவுக்குக் கால் மணிநேரம் தனியாகவே ஒதுக்கிக் கொடுத்துவிட்டார்கள். இருவரும் நீயா, நானா என நடிப்பில் போட்டிபோட்டு விருந்து வைத்திருக்கிறார்கள்.