80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 7 - ஆஹா... சைதை தமிழரசி! - பானுப்ரியா | 1980s evergreen Heroins - Bhanupriya - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 7 - ஆஹா... சைதை தமிழரசி! - பானுப்ரியா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், பானுப்ரியா.

அழகான கண்கள். வசீகர முகம். இயல்பான நடிப்பு. அபார நடனம். கொஞ்சலான குரல். இத்தகைய தனித்துவ குணங்களால் ரசிகர்களைக் கொள்ளைகொண்டவர், பானுப்ரியா. அவர் தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.


சினிமா வாய்ப்பும் ஏமாற்றமும்

பூர்வீகம், ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி. எனக்கு ரெண்டு வயசானப்போ சென்னையில் குடியேறிட்டோம். சின்ன வயசில் ரேடியோவில் சினிமாப் பாடல்களைக் கேட்டால் டான்ஸ் ஆடுவேன். இதனால் பெற்றோர் என்னை முறையா டான்ஸ் கத்துக்க அனுப்பினாங்க. ஒருகட்டத்துல டான்ஸ் மேல எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுச்சு. அதனால ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அடம்பிடிப்பேன். ஒருநாள் அண்ணனை அழைச்சுக்கிட்டு ஸ்கூல் முடியறதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டேன். அதனால் கோபமான அம்மா, என்னைப் பயங்கரமா அடிச்சாங்க. முதலும் கடைசியுமா நான் அடிவாங்கின தருணம் அதுதான். அப்பா சினிமா விநியோகஸ்தரா இருந்தார். விடுமுறை நாள்களில் அம்மா மற்றும் தங்கையுடன் கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போவேன். சினிமாவில் நடிகர்களின் டான்ஸ் மற்றும் நடிப்பைக் கூர்ந்து கவனிப்பேன். எனக்குள்ளும் நடிப்பு ஆசை உண்டாச்சு.

பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்த பிறகு, நிறைய வெளிநிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். இயக்குநர் பாக்யராஜ் சாரின் மனைவி பிரவீணாவும் நானும் டான்ஸ் கிளாஸ் நண்பர்கள். பிரவீணா அக்கா வீட்டில், நாங்க தோழிகள் பலரும் ரிகர்சல் பண்ணுவோம். அப்படி ஒரு தருணத்துல என்னைப் பார்த்த பாக்யராஜ் சார், ‘தூறல் நின்னுபோச்சு’ படத்தில் நடிக்கக் கேட்டார். அதற்கு என் பெற்றோரும் சம்மதம் சொல்ல, ரொம்ப உற்சாகமாகிட்டேன். ஆனா, என் சந்தோஷம் சிலநாள்கூட நீடிக்கலை. போட்டோ ஷூட்டுக்குப் பிறகு, `ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கே... எட்டாவதுதானே படிக்கிறே, பத்தாவது முடிச்சுடு. அப்புறம் சினிமாவில் நடிக்கலாம்’னு பாக்யராஜ் சார் சொன்னார். ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு.