Published:Updated:

`குணநலன்களை கண்டுபிடிக்கலாம்!'-நாட்டிலேயே முதல் முறையாக நெல்லையில் நாட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப்!

நாட்டு இன நாய்களை அடையாளம் கண்டறியும் விதமாகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பாக நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நெல்லையில் நடைபெற்றது. கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி வகை நாய்கள் இதில் பங்கேற்றன.

நாய்களுக்கு சிப் பொருத்தும் பணி
நாய்களுக்கு சிப் பொருத்தும் பணி

தமிழகத்தில் நாட்டு இனங்களைச் சேர்ந்த நாய்கள் பொழுதுபோக்குக்காகவும், வீட்டைப் பாதுகாக்கவும் வளர்க்கப்படுகின்றன. சிப்பிப் பாறை, கோம்பை ராஜபாளையம், கன்னி உள்ளிட்ட பாரம்பர்யமான சில நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களைப் பலரும் ஆர்வத்துடன் வளர்த்துவருகிறார்கள். இந்த வகை நாய்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்த நாய்கள்
சிகிச்சைக்கு வந்த நாய்கள்

அதனால் பாரம்பர்ய நாய் இனங்களைப் பாதுகாக்கும் முறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைமையான இனத்தைச் சேர்ந்த நாய்கள் காணாமல் போவதைத் தடுக்கவும் அதன் அடையாளங்களைக் கண்டறியவும் புதிய முயற்சியாகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பாக நாய்களின் உடம்பில் மருத்துவக் குணம் கொண்ட மைக்ரோ சிப் பொருத்தும் பணி நடைபெற்றது.

நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நாய்களுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தொடங்கிவைத்தார். இந்த மருத்துவ முகாமில் நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு இசிஜி, எக்கோ மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நாட்டு நாய்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அதற்கான நோய் கண்டறியும் சிகிச்சையும் செய்யப்பட்டது.

Vikatan
மைக்ரோ சிப் பொருத்தும் மருத்துவர்கள்
மைக்ரோ சிப் பொருத்தும் மருத்துவர்கள்

நாட்டிலேயே முதல்முறையாக நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மைக்ரோ சிப்பை பொருத்தும் பணி நெல்லையில் நடைபெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான நாய்களை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர்.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலச்சந்திரன் கூறுகையில், ``நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது நாட்டிலேயே இதுவே முதல் முறை. இதன் மூலம் நாய்களின் உரிமையாளர்களால் நாய்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

மைக்ரோ சிப் பொருத்துவதன் மூலம் பாரம்பர்யமான நாட்டு இன நாய்களைப் பாதுகாக்க முடியும்.
பாலச்சந்திரன்

இந்த சிப் பொருத்தப்படும் நாய்களை `யுனிவர்சல் டோனர்’ வகையில் சேர்க்கப்படும். நாயின் ரத்த வகை, அதன் குணநலன்கள் உள்ளிட்டவை சிப் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம். வேறு நாய்களுக்கு அவசரக் காலத்தில் ரத்தம் தேவைப்படும்போது உரிமையாளர்களின் அனுமதியுடன் பெறுவதற்கு மைக்ரோ சிப் உதவியாக இருக்கும். இதன் மூலம் நாட்டு இனங்களைச் சேர்ந்த நாய்களைப் பாதுகாத்துப் பராமரிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.