Published:Updated:

உதயசூரியன் சி்ன்னத்தை உருவாக்கியவர்! தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு தின சிறப்புக் கட்டுரை

உதயசூரியன் சி்ன்னத்தை உருவாக்கியவர்!  தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு தின சிறப்புக் கட்டுரை
உதயசூரியன் சி்ன்னத்தை உருவாக்கியவர்! தியாகி இரட்டைமலை சீனிவாசன் நினைவு தின சிறப்புக் கட்டுரை

‘‘மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களுக்கோ நித்திரை
போடுங்கள்
உதயசூரியனுக்கு முத்திரை!’’ - என்று இரவு நேரத்தில் ஐந்தே நொடிகளில் அழகுத் தமிழில் அண்ணா வாக்குக் கேட்டார் என்று படித்து இருப்பீர்கள்.

‘‘நாடு நலம் பெற, நாசகார ஆட்சி தொலைய, உங்கள் இதயசூரியனில் உதிக்கட்டும் உதயசூரியன்!’’ என்று உங்கள் ஊர் மைதானத்தில் கரகர தொண்டையில் கலைஞர் கருணாநிதி  பேசியதை ரசித்திருப்பீர்​கள்.

இந்த உதயசூரியன் சின்னம் யார் சிந்தனையில் முதன் முதலில் உதயமானது என்று தேடிப்போனால் கண்டு அடையும் முகம் ரெட்டைமலை சீனிவாசன்.

1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டுக்காக ஒரு கொடி தயார் செய்யப்பட்டது. தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர், பெரியார் உருவம் தாங்கிய அந்தக் கொடியில் சூரியன் உதிப்பதுபோல இருக்கும். ஆனால், இரண்டு மலைகளில் இருந்து உதயம் ஆவதைப் போன்ற சின்னம் ரெட்டைமலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உருவாக்கியதாக அமைந்திருந்தது.

‘சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பை 1936-ல் இவர் தொடங்கியபோது அந்த அமைப்புக்கு சூரியன்தான் சின்னமாக அமைந்து இருக்கிறது. சூரியனைவைத்து கொடி தயாரித்துள்ளார். மாநாடுகளில் அந்தக் கொடியையே ஏற்றியுள்ளார். அதனால், அந்தக் கட்சிக்கு ‘சூரியக் கட்சி’ என்ற பெயரும் இருந்து உள்ளது.

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

சுவர் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள், இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் உதயமாவதைப்போல. ரெட்டைமலை சீனிவாசனின் பெயரில் இருந்த இரட்டை மலைகளை வரைந்து அதில் இருந்து சூரியன் உதயமாவதைப்போல அந்தக் காலத்தில் வடிவம் கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்புக்காக குடியாத்தம் பகுதியில் இருந்து எஸ்.பி.பாலசுந்தரமும், ஜெ.ஜெ.தாஸும் இணைந்து 1941-ல் ஓர் இதழ் தொடங்கினார்கள். இந்த இதழின் பெயர் ‘உதயசூரியன்.’

“உதயசூரியன் இதழில்தான் இரண்டு மலைகளுக்கு நடுவில் உதயசூரியன் இருப்பது போன்ற சின்னம் வரையப்பட்டது’’ என்கிறார் ரெட்டைமலை சீனிவாசனின் பேத்தி முனைவர் நிர்மலா அருட்பிரகாஷ்.

ரெட்டைமலை சீனிவாசன் மனதில் உதயசூரியன் எப்படி உதித்தது? இளம் பருவத்தில் இருந்தே தினமும் சூரியனை வணங்கும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடித்தவர் அவர். இதைச் சொல்லும்போது கலைஞர் கருணாநிதியின் பழைய கிண்டல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒழுங்காகக் கட்சிப் பணி செய்யாத சில தூங்குமூஞ்சிகளைத் திட்டிய கருணாநிதி, ‘‘நம்முடைய தேர்தல் சின்னத்தை உதிக்கும்போது பார்க்காத பலபேர் நம் கட்சியில் உண்டு என்று எனக்குத் தெரியும்’’ என்றார்.

ரெட்டைமலை சீனிவாசன் தினமும் அதிகாலையில் சூரிய வணக்கம் செய்வார். அது அவரது இறை நம்பிக்கை. அவரது சிந்தனையே வித்தியாசமானது.

பட்டியல் இனத்து மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று புதுப் பெயர் வைத்து கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை காந்தியின் நிர்மாணத் திட்டங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தபோது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அதனை எதிர்த்தார் ரெட்டைமலை சீனிவாசன்.

‘‘ஒரு காலத்தில் இந்தக் கோயில்கள் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை. அதில் இருந்து எங்களை விரட்டிவிட்டு கைப்பற்றிக்கொண்டீர்கள். எங்களுக்குச் சொந்தமான கோயில்களைத் திரும்பக் கேட்காமல் அதனுள் நுழைய மட்டும் அனுமதி கேட்பது என்ன நியாயம்?’’ என்று கேட்டார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘ஆலயத்துக்குள் அனுமதித்தால் மட்டும் சாதி இழிவு போய்விடாது” என்றும் சொன்னார்.

சாதிக் கொடுமையில் இருந்தும், தீண்டாமைத் தீ வினையில் இருந்தும் விடுபட வேண்டுமானால், இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்துக்கு மாற வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னபோது, காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்த்தார்கள். அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ரெட்டைமலை சீனிவாசனும் எதிர்த்தார்.

‘‘நாம்தான் இந்து மதத்தில் இல்லையே. அவர்ணஸ்தர் அதாவது, வருணம் அற்றவர் ஆயிற்றே! இந்துக்களே அல்லாத நாம் இந்து மதத்தில் இருந்து எப்படி விலக முடியும்?’’ என்று கேட்ட இவர், ‘‘ஆதி திராவிடர் மதம் மாறுவது தேவையற்றது. எந்த மதத்துக்கு மாறினாலும் இழிவுபோகாது’’ என்று சொன்னார். அவர் சொன்னதைத்தான் இன்று கண் கூடாகப் பார்க்கிறோம்.

கிறிஸ்துவத்துக்குள் மதம் மாறிய பின்னாலும் சாதி கழுவப்படுவது இல்லை. சர்ச்சுகளை சாதி பங்கிட்டுக்கொள்கிறது. இஸ்லாத்துக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் அனுபவித்த கொடுமையை விளக்கி, ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ புத்தகத்தை அன்வர் பாலசிங்கம் எழுதி இருக்கிறார்.  இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்பே உணர்ந்தவராக ரெட்டைமலை சீனிவாசன் இருந்தார். தியாசாபிக்கல் சொசைட்டியைச் சேர்ந்த பிளாவட்ஸ்கி அம்மையாரும், கர்னல் ஆல்காட்டும் இவருக்கு நண்பர்களாக இருந்துள்ளார்கள்.   பௌத்த மதத்துக்கு இவரை மாற்ற முயற்சிக்கிறார் ஆல்காட். ஆனால், அதனை இவர் ஏற்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி தங்களது இதழ்களில் எழுதிக்கொண்டார்கள்.

‘‘நீ எதில் இருக்கிறாயோ, அதில் இருந்து போராடு. ஒரு மதத்தில் இருக்கும்போது என்ன சலுகையை அனுபவிக்கிறாயோ அந்தச் சலுகையை இன்னொரு மதத்துக்குப்போன பிறகு எதிர்பார்க்காதே!” என்று கட்டளையிடக் கூடியவராக ரெட்டைமலை சீனிவாசன் இருந்தார்.

இளமைக்காலம் முதல், தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமையே அவரை இப்படி யோசிக்க வைத்தது. இந்தச் சமூக அழுக்கைத் துடைப்பதற்காகவே 1890-ம் ஆண்டு திராவிட மகாசன சபையை பண்டித அயோத்திதாசருடன் இணைந்து தொடங்கினார். பிறகு தனது அமைப்பின் பெயரை, ‘ஆதிதிராவிட மகாசன சபை’ என மாற்றினார். ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கினார். ‘‘எந்த வார்த்தையைச் சொல்லி இழிவுபடுத்துகிறார்களோ, அதையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்’’ என்றார். 1894-ல் இவர் அனுப்பிய விரிவான மனுதான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகமோசமான சாதி, தீண்டாமைக் கட்டமைப்பு தலைவிரித்து ஆடுகிறது என்பதை பிரிட்டிஷ் அரசுக்கு உணர்த்தியது. இதன்பிறகு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் நல ஆணையம். இதுதான் பட்டியல் இன மக்களுக்குக் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், மனைகள், விவசாய நிலங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க வழி வகுத்தது.

இந்தக் கோரிக்கைகளை நேரடியாக பிரிட்டிஷாரிடம் சொல்வதற்காக லண்டன் பயணமானார். லண்டன் செல்வதற்கு முன் தென்னாப்பிரிக்கா போனார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். அங்கு காந்திக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. அனைவரும் பார்த்து இருப்பீர்கள், எம்.கே.காந்தி என்று தமிழில் காந்தி போட்ட கையெழுத்தை. அதைக் கற்றுக்கொடுத்தவர் இந்த ரெட்டைமலை சீனிவாசன்தான். 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் வந்தவர், முன்னிலும் உற்சாகமாகப் போராடத் தொடங்கினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார். மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப் பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா... தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். ‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார். ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் மேல்சாதிக்காரன் தொட்டுத் தூக்கமாட்டானா?’’ என்று ஜார்ஜ் மன்னர் திருப்பிக் கேட்டார். ‘‘தூக்க மாட்டான்’’ என்றார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘அப்படி நடக்க எனது ராஜ்யத்தில் நான் விடமாட்டேன்’’ என்ற ஜார்ஜ், ரெட்டைமலை சீனிவாசனின் இரண்டு கையையும் பிடித்துக் குலுக்குகிறார். ‘‘அன்புக்குரிய இந்திய மக்கள் வளமுடன் ஆனந்தமாக வாழ வழிகாட்டிய மாமனிதர்களின் வரலாற்றில் உங்கள் பெயரும் இடம்பெறும்’’ என்று அப்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் சொன்னது இவரைத்தான்.

தம் இன மக்களுக்காக சலனமில்லாமல் ஒரு நீரோடையைப்போல 80 ஆண்டுகளுக்கு மேல் போராடியும் வாதாடியும் வந்த வாழ்க்கை ரெட்டைமலை சீனிவாசனுடையது. அவரை மதம் மாற்ற நினைத்தார்கள்; மதம் மாறவில்லை. வன்முறைப் பாதைக்குத் தூண்டினார்கள்; மசியவில்லை. ‘‘தடி எடுத்தால் ஒரே நாளில் சமாதானத்துக்கு வழி ஏற்பட்டுவிடும். ஆனால் நான் அதனை விரும்பவில்லை’’ என்றார். ‘‘விரோதமும் வெறுப்பும் மமதையும் பாவமானவை’’ என்ற அவர், ‘‘அரசியல் தந்திரங்களை அறிந்து ஆட்சியைக் கைப்பற்றும் முறையை நாடி உழைக்க வேண்டும்’’ என்று அவர் சொல்லி 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அப்படி ஓர் இயக்கம் பட்டியல் இன மக்கள் மத்தியில் ஏன் உருவாகவில்லை? அதை உருவாக்கத் தடங்கலாக இருந்த அக, புறக்காரணிகள் எவை என்பதை சிந்திப்பார் யாருமில்லை. இன முன்னேற்றத்துக்குப் பயன்படாத விவாதங்கள் மட்டுமே நடக்கிறது. ஆக்கபூர்வமான வரலாற்று, தத்துவார்த்த ஆய்வுக்கு யாருமே தயாராகவில்லை. 1890-ம் ஆண்டு முதல் 125 ஆண்டு காலப் பாரம்பர்யம் கொண்ட பட்டியல் இன அரசியல் அமைப்புக்கு முறையான வரலாறு இன்னும் தொகுக்கப்படவில்லை.

1772-ல் இந்த இன மக்கள்பால் தனது கவனத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி திருப்பியது. அந்த ஆவணங்கள் தொகுக்கப்படவில்லை. ஆனால், சில வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு தங்களது மேதமைகள் வெளிப்பட்டால் போதும் என்ற பூசிமொழுகும் எழுத்துகள் நித்தமும் எழுதப்படுகின்றன.

திராவிட இயக்கம் பட்டியல் இனமக்களை உள்வாங்கிக் கொண்டது உண்மைதான். பின்னர் மார்க்சிஸ இயக்கங்களில் இவர்கள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டதும் உண்மைதான். இந்த இயக்கங்கள் அந்த மக்களை கபளீகரம் செய்து விடாமல் தடுக்கும் தடுப்பணைத் தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோருக்குப் பிறகு இல்லாமல் போனது ஏன்? இருந்தவர்களும் பெரிய சக்திகளாக ஆகாமல் போனது ஏன்?

பாதி பேரை அரசியலும் சினிமாவும் காவு வாங்க, மீதி பேரை இரண்டு மதங்கள் தங்கள் கோரப்பசிக்கு இரையாக்கிக்கொள்ளும் சூட்சுமத்தை இன்னுமா உணரவில்லை? பெரியாரியத்தையும், மார்க்சிஸத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அரவணைக்கும் சக்தியாகப் பார்க்கவிடாமல் பிளவுபடுத்தும் ஆராதனைகள் எந்தப் பின்னணியில் இருந்து படையெடுக்கின்றன என்பதை தலித் இயக்கங்கள் இன்னுமா அறியவில்லை?