Published:Updated:

‘ஆறு பால்ல ஆறு சிக்ஸ்... அதான் யுவராஜ் சிங்!’ - பிறந்தநாள் பதிவு #HappyBirthdayYuvi

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ஆறு பால்ல ஆறு சிக்ஸ்... அதான் யுவராஜ் சிங்!’ - பிறந்தநாள் பதிவு #HappyBirthdayYuvi
‘ஆறு பால்ல ஆறு சிக்ஸ்... அதான் யுவராஜ் சிங்!’ - பிறந்தநாள் பதிவு #HappyBirthdayYuvi

‘ஆறு பால்ல ஆறு சிக்ஸ்... அதான் யுவராஜ் சிங்!’ - பிறந்தநாள் பதிவு #HappyBirthdayYuvi

மிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் இன்று பிறந்தநாள் கொண்டாடுவது போல், கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டாரும் அமைதியாக தன் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். அவர்தான் யுவராஜ் சிங். சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் அங்கொன்று இங்கொன்றுமாக முட்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர் கடந்து வந்ததே மண்ணுக்குப் பதில் முட்களால் விரிந்திருந்த பாதையில்தான். அதைப் பற்றிய ஒரு சின்ன ரீவைண்டு! 

கொஞ்சம் தங்கம் மாதிரி மொறைச்சா சிங்கம் மாதிரி :

இவரின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும், இவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதுதான் நினைவுக்கு வரும். இங்கிலாந்துடன் ஆடிய அந்த ஆட்டத்தில் ஃப்ளின்டாப்  இவரை வம்பு இழுக்க, அதுக்கு அடுத்த ஓவரில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டவர் ஸ்டுவார்ட் ப்ராட். அன்று இவர் ஆடிய மைதானத்தில் ஒருதுளி மழையில்லை. ஆனால் இவரின் பேட்டில் இருந்து இடிச்சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.  இளம் வீரராக, இந்திய அணியில் நுழையும்போது இவரிடம் எத்தகைய வெறி இருந்ததோ, அதே வெறியைப் பல ஆண்டுகளாக தக்கவைத்திருக்கிறார். சிக்கலான நேரங்களில் யுவராஜ் கை கொடுத்திருக்கும் ஆட்டங்களைப் பட்டியல் எடுத்துப் பார்த்தால், லிஸ்ட் அடிஷனல் ஷீட்டைத் தாண்டும். அதேபோல் ட்ரெஸிங் ரூமில் இவர் செய்யும் சேட்டைகளுக்கும், ரகளைகளுக்கும் அளவே இருக்காது. மேட்ச் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி யுவராஜ் ட்ரெஸிங் ரூமில் இருந்தால் என்டர்டெயின்மென்ட்டுக்குப் பஞ்சமே இருக்காது. களத்திலும் ரகளையாக பல தில்லாலங்கடி வேலைகள் பார்ப்பார். கெட்ட பையன் சார் இந்த யுவராஜ்!

உலக நாயகன் :

2011 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் எல்லோரும் சொதப்ப, தனி ஆளாக நின்று விளையாடி சதம் அடித்து அணிக்கும் நம்பிக்கை ஊட்டியதோடு, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். அன்று இரவு... மூச்சுத் திணறல், இரத்த வாந்தி, மயக்கம் இவை அனைத்தும் ஒன்றாக வர `ஏதோ பெரிய பிரச்னை வரப்போகிறது' என இவரின் ஆழ்மனம் எச்சரித்திருக்கிறது. தோனியும், சச்சினும் ஓய்வெடுக்கும்படி அறிவுரைத்தார்கள். `வெறும் ஃபுட் பாய்ஸன்தான் ஒண்ணும் பிரச்னை இல்ல' எனச் சொல்லி உலகக் கோப்பையை கைப்பற்ற, அடுத்த ஆட்டத்தில் களமிறங்கினார். அப்போது யுவராஜிடமிருந்த கான்ஃபிடன்ஸ் தோனிக்கு நம்பிக்கையளிக்க அவரும் தடுக்கவில்லை. காலிறுதியில் இந்தியா... ஆஸ்திரேலியாவுடன் மோதிய அந்த ஆட்டத்தில், பல உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்த அவர்களின் வெற்றிநடையை முடித்து வைத்தது இந்திய அணி. 

ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங்.  அடுத்ததாக அரையிறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக டக் அவுட் ஆனார் யுவி. இருப்பினும் இந்திய அணியை சச்சினின் ஆட்டம் தூக்கிவிட, 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இலங்கைதான் எதிராளி. பவுலிங்கில் எதிர்பார்த்த எஃபெக்ட் கிடைக்காமல் போக, ஓபனிங் ஆர்டர் பேட்டிங்கிலும் சொதப்பல். தோல்வியை நோக்கி பயணித்த இந்திய அணியைக் காப்பாற்றிய ஹீரோக்கள் கவுதம் காம்பீரும் தோனியும்! இறுதியாக 'India lift the World Cup after 28 years' என தழுதழுக்கும் குரலில் ரவிசாஸ்திரி அறிவித்தபோது மைதானத்தில் தோனியுடன் இருந்த இன்னொருவர் யுவராஜ். பெவிலியனிலிருந்து மைதானத்தை நோக்கி ஆனந்தக்கண்ணீரோடு நடை போட்ட சச்சினை, அள்ளித் தழுவினார் யுவராஜ். எதையோ சாதித்த வெறி அவர் கண்களில் தெரிந்தது. அந்தச் சாதனைக்குக் கிடைத்த பரிசு, உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது. 

விழாநாயகன் :

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டனாக யுவி விளையாடிக்கொண்டிருந்த சமயம். மீண்டும் தலை சுற்றல், இரத்த வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவை யுவராஜை வதைக்க ஆரம்பித்தன. பதட்டத்தில் யுவராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அவரது பெற்றோர்கள். பரிசோதனையின் முடிவில், யுவராஜின் நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தனது மகனுக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என்ற ஒரு கவலை ஒருபக்கம், அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது இப்படி நிகழ்ந்தவிட்ட வருத்தம் ஒரு பக்கம். விஷயம் தெரிந்த யுவராஜும் நொறுங்கிப்போனார். இந்திய அணியின் சாதனைப் பயணத்தில் தனது பங்கும் இருக்க வேண்டுமென்று நினைத்த யுவராஜ், அணியில் யாரிடமும் சொல்லாமல் இங்கிலாந்து டூருக்கு ரெடியானார். ஆனால் புற்றுநோய் தீவிரமானதால் மூன்று டெஸ்ட் மேட்ச்களில் மட்டுமே அவரால் ஆட முடிந்தது. இதற்குப் பிறகும் சிகிச்சையை தாமதித்தால் சிக்கலாகிவிடும் என்று டாக்டர்கள் அறிவுரை சொல்ல, 2011 நவம்பரில் சிகிச்சைக்குத் தயாரானார் யுவி. “ட்ரீட்மென்ட்டுக்கு அப்புறம் என் உடல்நிலை எப்படி இருக்கும்னு தெரியல, ஆனா நான் கண்டிப்பா இந்திய அணிக்கு மறுபடியும் விளையாடுவேன்” என்ற வார்த்தைகளை மட்டும் சச்சின் உள்பட தன் நெருக்கமானவர்களுக்குச்  சொல்லிவிட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா பறந்தார். 

ஐந்து மாதங்கள் கடுமையான சிகிச்சை. மொட்டைத்தலையுடன் இவரின் புகைப்படம் அந்தச் சமயத்தில் வைரலானது. அதைப் பார்த்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட இரக்கமும், கனிவான வார்த்தைகளும் யுவராஜுக்குப் பிடிக்கவில்லை. மாறாக `யுவி... யுவி...' என்று கூட்டத்தின் உற்சாகக் குரல்களையே எதிர்பார்த்த அவர், மீண்டும் மைதானத்தில் கால் பதிக்க வந்தார். ஆனால் அவரிடமிருந்த நம்பிக்கை அவருக்குக் கை கொடுத்ததைப்போல், அவரின் உடல்நிலை கைகொடுக்கவில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி மெதுவாக பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அது காலப்போக்கில் வெறித்தனமான பயிற்சியாக மாறியது. பயிற்சிக்கானப் பயன், 2012 துலீப் டிராஃபியில் பிரதிபலித்தது. அந்தத் சீரியஸின் முடிவில் 208 ரன்களைக் குவித்து, `ஐ எம் பேக்' என்று மக்களுக்கு உணர்த்தினார். 

மீண்டும் சறுக்கல் :

இந்திய அணியில் இடம்பெறுவது சிக்கலாக இருந்த நேரம் அது. இருப்பினும் மீண்டும் இடம்பிடித்தார் யுவி. பாராட்டுக்குரிய ஆட்டம் இவரிடமிருந்து வெளிப்படவில்லை என ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இவரை அணியை விட்டு நீக்குமாறு கொந்தளித்தனர். விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல், விளையாட்டில் மட்டுமே கவனமாக இருந்தார். ஓரிரு ஆட்டங்களில் சிறப்பு ரக ஆட்டம், ஓரிரு ஆட்டங்களில் சுமார் ரக ஆட்டம் என அணியில் உள்ளே - வெளியே நிலையில் இருந்தார் யுவராஜ். ஆனால் நம்பிக்கையில் குறைவில்லை. கேன்சர் சிகிச்சைக்குச் செல்லும் முன் எந்தளவு நம்பிக்கை இருந்ததோ, அதே அளவு நம்பிக்கைதான் அப்பொழுதும் இருந்தது. அதன் பின் நடந்த ஆஸ்திரேலியா தொடர், ஆசிய தொடர், உலகக்கோப்பை, ஐ.பி.எல் டி-20 போன்ற தொடர்களில் தொடர்ந்து தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன் ஃபார்மை மீட்டெடுத்தார். ``நீ என்ன வேணாலும் சொல்லிக்க, என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு'' என தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு அவர் சொல்லாமல் சொல்லிய பதில் இது. தோனியின் கேப்டன்ஷிப் வெற்றிகரமாக தொடர உதவியதில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ஆரம்ப பேட்ஸ்மென்கள் சொதப்பிய பல ஆட்டங்களில், `என்னைத் தாண்டி என்  டீம் மிடில் ஆர்டரை தொடு பார்ப்போம்' என மிரட்டிய யுவராஜ் களம்கண்டு கொஞ்ச காலமாகிறது. ஆனாலும் நம்பிக்கையைத் தளரவிடாமல் 'யுவி' யுவி' என்ற கோஷத்தை மீண்டும் கேட்கக் காத்திருக்கிறார். அந்தக் கோஷத்தைக் கேட்டபடி அவர் பறக்கவிடும் பந்துகளைப் பிடிக்க, பெவிலியனில் உட்கார்ந்திருக்கும் ரசிகனும் காத்திருக்கிறான். இரண்டும் சீக்கிரமே நடக்கும் என யுவராஜைப் போலவே நம்புவோம். 'நீ கீழே விழுறது பிரச்னையில்லை. அங்கேயே விழுந்து கிடந்தாதான் பிரச்னை' என தன் வாழ்க்கை மூலம் நம்பிக்கையூட்டும் யுவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு