Published:Updated:

“தொழிலாளர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும்?!” இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் மார்க்ஸ் கேள்வி?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தொழிலாளர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும்?!” இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் மார்க்ஸ் கேள்வி?!
“தொழிலாளர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும்?!” இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் மார்க்ஸ் கேள்வி?!

“தொழிலாளர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும்?!” இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் மார்க்ஸ் கேள்வி?!

ம்முடைய வாழ்நாளில் சில மனிதர்களை நம்மால் மறக்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் நம்மில் ஏற்படுத்திய பாதிப்புகள் அத்தகையதாக இருக்கும். அப்படி என் நண்பனின் மூலமாக நான் அறிந்து கொண்ட மனிதர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 60 வயதைக் கடந்த அந்த மனிதர் தன் வீட்டின் வாசலில் ஒரு கரும்பலகையை வைத்திருக்கிறார். விலைவாசி உயர்வானாலும் சரி, பேருந்துக் கட்டண உயர்வானாலும் சரி இல்லை மக்களுக்கு எதிரான எந்தப் பிரச்னையானாலும் சரி தன்னுடைய எதிர்ப்பை அந்தக் கரும்பலகையில் எழுத அவர் தவறியதே இல்லை. இப்படி எழுதுவதால் என்ன பயன் இருக்கப்போகிறது எனப் பலரும் கேட்கலாம். ஆனால், இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் அவர் செவிசாய்த்ததே இல்லை. தன்னுடைய எதிர்ப்பை அவர் இப்படிக் காண்பித்துக் கொண்டேதான் இருந்தார். அவர் வீட்டில் மாட்டப்பட்டிருந்த படங்களில் கார்ல் மார்க்ஸின் படம்தான் பெரியது. நாட்டின் ஒவ்வொரு பிரச்னைக்கும் தன் எதிர்ப்பை பதிவுசெய்து வரும் அந்தப் பெரியவருக்குள் கார்ல் மார்க்ஸ் என்ற மனிதர் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும். அப்படி நூற்றாண்டுகளைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சீர்திருத்த நாயகன் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்தை இன்று உலகம் கொண்டாடி வருகிறது.

"மக்களுக்காகவே நாங்கள் வாழ்கிறோம், சேவை செய்கிறோம்", எனக் கூறிவரும் இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களை மார்க்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே நிஜ புரிதலை அவர்களுக்குள் கொண்டுவரும். மார்க்ஸ் வாழ்நாளில் அவரது கடைசி மணித்துளி வரை அவருடன் இருந்தது வறுமை ஒன்றுதான். தனது குழந்தைகளுக்கு ஒருவேளை உணவளிக்க பணம் இல்லாத நேரங்களில்கூட உலகத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டிய உணவு பற்றி சிந்தித்தவர் கார்ல் மார்க்ஸ்.

கையில் சுத்தமாகப் பணம் இல்லை, குழந்தைகளைச் சரி வர பராமரிக்க முடியவில்லை, சொந்த நாட்டில் இடமில்லை, எழுதுவதற்கு தன்னிடம் பேப்பர் கூட இல்லை இப்படி பல `இல்லைகள்' நிறைந்ததாகவே இருந்த மார்க்ஸிடம் இருந்தது தனது மனைவி ஜென்னியின் அன்பு மட்டும்தான். ஜென்னி பிறந்து வளர்ந்ததெல்லாம் மிகப்பெரிய செல்வச் செழிப்பான குடும்பத்தில். வறுமையில் வாட வேண்டுமென்ற அவசியம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. அதுவும் தன்னைவிட நான்கு வயது குறைந்த ஒருவரை திருமணம் செய்ய வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. திருமணத்திற்காக எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இவை அனைத்தையும் கார்ல் மார்க்ஸுக்காக ஏற்றுக் கொண்டார் ஜென்னி. மார்க்ஸிடம் அவர் எதிர்பார்த்தது அன்பு மட்டும்தான். வறுமை என்பது வெறும் வார்த்தை அல்ல. அதனை முற்றிலும் அனுபவித்த அந்தத் தம்பதியின் ஒரே குறிக்கோள் அடிமைப்பட்டு கிடக்கும் தொழிலாளர் வர்க்கம் தங்களுக்கான உரிமையைப் பெற வேண்டும் என்ற ஒன்றுதான். சரியான ஊட்டச்சத்து இல்லாமல் பிறந்த அவரது குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துபோக அடுத்த குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லாத நேரத்திலும் கார்ல் மார்க்ஸ் மீது கொண்ட காதல் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை. அந்தக் காதல்தான் மார்க்ஸை தொய்வில்லாமல் உழைக்க வைத்தது. சிந்திக்க வைத்தது. எழுத வைத்தது. தொடர்ந்து தொழிலாளர் நலனுக்காக இயங்க வைத்தது. ஜென்னி இல்லாத கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை பக்கங்கள் எழுதி முடிக்கப்படாததாகவே இருந்திருக்கும்.

தந்தை பெரியாரை வெறும் `கடவுள் மறுப்பாளர்' என்று மட்டுமே நம்ப வைக்க முயற்சிகள் இன்றளவும் எப்படி நடந்து கொண்டிருக்கின்றனவோ அதேபோன்று கார்ல் மார்க்ஸை வெறும் `பணக்காரர்களின் மீது காழ்ப்புஉணர்ச்சி கொண்டவராக' சித்திரிக்கும் முதலாளித்துவ அரசியல் இன்றும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. காரணம் முதலாளி வர்க்கத்தின் சூழ்ச்சிகளை வேரறுக்க கார்ல் மார்க்ஸ் மக்கள் முன் வைத்த எளிமையான கேள்விகள்தாம். குறிப்பாக, ``மக்கள் எல்லோரும் ஒரு பொருளை வாங்குகிறார்கள்; அந்தப் பொருளை உற்பத்தி செய்ய பல தொழிலாளர்களின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது; ஆனால், அந்தப் பலனை முதலாளி மட்டும் எவ்வாறு அனுபவிக்க முடியும். அந்தப் பொருளை உருவாக்க கஷ்டப்பட்டு வேலை செய்த தொழிலாளர்கள் மட்டும் எப்படி வறுமையில் வாழ முடியும்." என்ற கேள்வியைதான் கார்ல் மார்க்ஸ் மக்கள் முன் வைத்தார். இந்தக் கேள்வி வெகுஜன மக்களைச் சிந்திக்க வைத்தது. அதிகார வர்க்கத்தை நிலைகுலைய வைத்தது. இந்தக் கேள்விகளுக்கான பதிலை மக்கள் தேட முற்பட்டபொது மார்க்ஸ் மீதும், மார்க்ஸிஸ கொள்கைகள் மீதும், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீதும் முதலாளிகள் தங்கள் கருத்து வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டனர்.

சே குவேராவை தற்போது வர்த்தக பொம்மையாக்கி சமுதாயத்தில் ஊடுருவவிட்டு அவரது கருத்துகளை மறக்கச் செய்து வெறும் முகத்தை மட்டும் நினைவில் கொள்ளச் செய்ததைப் போன்று, மார்க்ஸை செய்து விட முடியாது. காரணம், முதலாளித்துவம் வர்த்தக நோக்கத்தில் மார்க்ஸைப் பயன்படுத்தினால் கூட எங்கு அவரது கொள்கைகள் மக்களைச் சென்றடைந்து விடுமோ என்கிற பயத்தை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார் கார்ல் மார்க்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு